செப்பாங், அக் 4 : போலோ மற்றும் குதிரையேற்ற விளையாட்டுகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், பங்கேற்கவும் பொதுமக்களுக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்க, சிலாங்கூர் அரச போலோ - குதிரையேற்றக் கிளப் (RSPEC) விரும்புகிறது.
சிலாங்கூர் அரச போலோ- குதிரையேற்றக் கிளப், ஒரு பிரத்யேகமான அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமேயான உறுப்பினர் கிளப் அல்ல ;
மாறாக பொதுமக்களையும் போலோ மற்றும் குதிரையேற்ற உலகையும் இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்பட விரும்பும் ஒரு பொதுக் கிளப் என அக்கிளப்பின் தலைவர், டத்தோ சையத் புத்ரிஸ் புத்ரா ஜமாலுல்லைல் தெரிவித்தார்.
"வரும் காலத்தில் இக்கிளப் விளையாட்டு, கல்வி மற்றும் சமூகத் திட்டங்களின் அமைப்பை விரிவுபடுத்தும். இது மேலும் பலருக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு, போலோ மற்றும் குதிரையேற்ற விளையாட்டுகளைப் பற்றி தெரிந்துகொள்ளவும், முயற்சி செய்யவும், அதில் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கும்.
இந்தத் தொடர்ச்சியான முயற்சி புதிய திறமையாளர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும். குதிரையேற்ற விளையாட்டுச் சூழலை வலுப்படுத்தும். அதோடு இக்கிளப் பொதுமக்களுக்கு பயனுள்ள ஒரு விளையாட்டு, பொழுதுபோக்கு இடமாக மாறும்" என அவர் கூறினார்.

நேற்றிரவு, இங்குள்ள சைபர் நிகழ்ச்சி அரங்கில் (Cyber Event Hall) சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழா ஆட்சியைக் கொண்டாடும் வகையில், சிலாங்கூர் அரச போலோ - குதிரையேற்றக் கிளப்பின் பிரமாண்ட இரவு உணவு விருந்து நடைபெற்றது.
சிலாங்கூர் மாநிலம், வசதியான விளையாட்டு வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ்-ஜின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த போலோ- குதிரையேற்றக் கிளப்பின் கட்டுமானம் அமைந்திருப்பதாகவும் டத்தோ சையத் புத்ரிஸ் தெரிவித்தார்.
"செப்பாங் மிகவும் பொருத்தமான மாவட்டங்களில் ஒன்றாகக் கண்டறியப்பட்டது. 28 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கிளப், உலகத்தரம் வாய்ந்த வசதிகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு தனித்துவமான நோக்கத்தையும் கொண்டுள்ளது.
2024 நவம்பரில் தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகளில், போலோ மைதானம், மணல் ஓடுதளம் (sand trek), 136 குதிரை லாயங்கள், அத்துடன் உள்ளரங்கு, வெளியரங்கு மற்றும் எட்டு பிக்கிள்பால் (pickleball) மைதானங்களைக் கொண்ட செஜிவா சமூக கிளப் (Sejiwa Social Club) ஆகியவை அடங்கும்," என்று அவர் கூறினார்.
இதனிடையே இக்கிளப் பொதுமக்களுக்கு திறக்கப்படுவதன் வாயிலாக பலர் இந்த விளையாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குமென நாட்டின் முன்னாள் குதிரையேற்ற வீரர் டத்தோ காபில் அம்பக் முஹம்மது ஃபாதில் தெரிவித்தார்.
ஒருவேளை பலர் விளையாட பயப்படலாம் மற்றும் இந்த விளையாட்டு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமேயானது என்று நினைக்கலாம்," என்று அவர் கூறினார்.

முன்னதாக, சிலாங்கூர் சுல்தான் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சிலாங்கூர் சுல்தான் வெள்ளி விழா போலோ வெற்றியாளர் கோப்பையை (Piala Kejohanan Polo Jubli Perak Sultan Selangor) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா மற்றும் பகாங் தெங்கு அம்புவான் துங்கு அசிசா ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா மற்றும் பகாங் இளவரசர் தெங்கு ஹஸனல் இப்ராஹிம் ஆகியோரும் உடன் இருந்தனர்.




