கிள்ளான், அக் 3 - இன்னும் ஒன்று அல்லது இரு வாரங்களில், மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை பக்காத்தான் ஹரப்பான் வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகள் இரு மாதங்களுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டு விட்டதாக, பக்காத்தான் ஹரப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.
"தேர்தல் இயந்திரம் தயாராக உள்ளது. வேட்பாளர் பெயர்களை அறிவிக்க வேண்டும். அதற்கான தேதிக்காக காத்திருக்கிறோம் " என அமிரூடின் கூறினார்.
இதனிடையே, ஒத்துழைப்பு தொடர்பில் எந்த தரப்புடனும் பேச்சு வார்த்தை நடத்துவதில் ஹரப்பான் இன்னும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநில நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான இடப் பகிர்வு முடிவு செய்யப்பட்டு விட்டதாக இதற்கு முன்பு மலாக்கா ஹரப்பான் கூறியிருந்தது.
எனினும்,ஹரப்பான் தலைவர் மன்றம் , மாநில தலைமைத்துவம், கூட்டணி தேர்தல் இயக்குநர் ஆகிய தரப்புகளுடன் கலந்துப் பேசிய பின்னர், வேட்பாளர் பட்டியல் இறுதி முடிவு செய்யப்படும் எனன மலாக்கா ஹரப்பான் குறிப்பிட்டிருந்தது.
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் குறித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையம், அக்டோபர் 7-ஆம் தேதி சிறப்பு கூட்டம் நடத்துகிறது.



