ஷா ஆலாம், செப் 3 - எஃப்1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரி போட்டியின் தொடக்க நாளான நேற்று செப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்துக்கான (SIC) தனது ஷட்டில் பேருந்து சேவைகள் குறித்து வந்த புகார்களைத் தொடர்ந்து, ரேபிட் கேஎல் (Rapid KL) நிறுவனம், அத்தளத்துக்கான பயணிகள் ஏறி இறங்கும் ஏற்பாடுகளை மாற்றியமைத்திருக்கின்றது.
பயணிகள் சீராகச் சென்று வர SIC மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக ரேபிட் கேஎல் தெரிவித்தது.
நேற்று முன்தினம் திட்டமிட்டபடியும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருடன் ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளுக்கு இணங்க தனது ஷட்டில் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன என்று அந்நிறுவனம் கூறியது.
“ தற்போது ஏற்பாடுகளை மேம்படுத்தியப் பிறகு,இன்று காலை 11 மணி நிலவரப்படி போக்குவரத்து நெரிசலின்றி பயணிகளின் நடமாட்டம் சீராகவும் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்தது” என்று அந்நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

நேற்று, ஷட்டில் பேருந்துகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது, மோசமான கூட்ட நெரிசல் SIC-ல் குடிநீர் பெறுவதில் சிரமமாக இருந்தது என்று கார் பந்தய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக புகார் தெரிவித்திருந்தனர்.
சில பார்வையாளர்கள் பேருந்துகளுக்காக மணிக்கணக்கில் காத்திருந்ததாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதனிடையெ, ரசிகர்கள் எதிர்கொண்ட சிக்கல்களை SIC ஒப்புக்கொண்டதுடன், போக்குவரத்து, ஷட்டல் மற்றும் கூட்ட நெரிசல் நிர்வகிப்பு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை வலுப்படுத்த தனது போக்குவரத்து பங்காளிகள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.



