பெட்டாலிங் ஜெயா,அக் 3 : துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருளுடன் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதப்படைகளின் அனைத்து ஆயுத, வெடிமருந்து கிடங்குகளும் முழுமையாக சோதிக்கப்பட்டு, எந்தவொரு இழப்பும் பதிவாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், அனைத்து ஆயுத, வெடிமருந்து கிடங்குகளிலும் உடனடியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆயுதப்படை தெரிவித்தது.
"அந்த அதிகாரி செப்டம்பர் 28 -ஆம் தேதி ஒரு பொது உயர் கல்வி கூடத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு உதவுவதற்காக அவர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்று ஆயுதப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
"அதிகாரியின் ஆரம்பகட்ட சிறுநீர் பரிசோதனையில், கிராத்தோம் (kratom - கொப்பரை இலை/கெதும்) இலையில் காணப்படும் 'மிட்ராகினைன்' (mitragynine) என்ற கலவை இருப்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும், அந்த முடிவு ஆய்வகத்தின் கூடுதல் உறுதிப்படுத்தல் மற்றும் அதிகாரிகளின் விசாரணை முடிவுகளுக்கு உட்பட்டதாகும்" என்றும் ஆயுதப்படை கூறியது.
தங்களது அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும், குறிப்பாக ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுதல் போன்றவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக ஆயுதப்படை தெரிவித்தது.
விசாரணையைத் தொடர்ந்து விதிமுறை மீறல்கள் ஏதேனும் நிரூபிக்கப்பட்டால், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.



