கோலாலம்பூர், அக் 2: தேசியப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான 2027-ஆம் ஆண்டு கல்வி நாட்காட்டி, குழு ஏ மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி நான்காம் தேதி தொடங்கி டிசம்பர் இரண்டாம் தேதி நிறைவடையும்.
குழு பி மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி நான்கில் தொடங்கி டிசம்பர் 3-இல் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குழு ஏ பிரிவில் கெடா, கிளாந்தான் மற்றும் திராங்கானு ஆகிய மாநிலங்கள் அடங்கும்.
அதே வேளையில், குழு பி பிரிவில் ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களும், கோலாலம்பூர், லபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய கூட்டரசு பிரதேசங்களும் அடங்கும்.
2027ஆம் ஆண்டு பள்ளித் தவணைக் காலத்தின் போது வரும் நோன்புப் பெருநாள் , சீனப் புத்தாண்டு, தீபாவளி பண்டிகை, ஈகைத் திருநாள், காமாத்தான் பண்டிகை (Pesta Kaamatan), டயாக் காவாய் தினம் (Hari Gawai Dayak), விசாகத் தினம், கிறிஸ்மஸ் பண்டிகை போன்ற பண்டிகைக் கால விடுமுறைத் தேதிகளையும் கல்வி அமைச்சு ஒருங்கிணைத்துள்ளது.
"நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு, ஈகைத் திருநாள், விசாகத் தினம் மற்றும் தீபாவளிப் பண்டிகை ஆகிய முக்கிய பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காகக் கல்வி அமைச்சு வழங்கும் கூடுதல் விடுமுறை நாட்களை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.
இந்த கூடுதல் விடுமுறை நாட்களுக்குப் பதிலாக வேறு நாட்களில் வகுப்புகள் நடத்தத் தேவையில்லை (மாற்று வகுப்புகள் தேவையில்லை).
"மேலும், 2028ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணைத் தொடக்கம் குழு ஏ மற்றும் குழு பி ஆகிய இரு பிரிவினருக்கும் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கும் என்றும் அமைச்சு நிர்ணயித்துள்ளது," என்று கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய பள்ளி நாட்காடி, நாடு முழுவதும் 2028ஆம் ஆண்டு பள்ளித் தவணைத் தொடக்கத்தை ஒரே சீராக உறுதி செய்வதையும், பள்ளி நிர்வாகத் திட்டமிடல் மற்றும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மிகவும் ஒழுங்கான முறையிலும் பயனுள்ளதாகவும் மேற்கொள்வதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.



