
கோலாலம்பூர், அக் 2: ரவாங் பழைய நகரத்தின் மறுசீரமைப்புத் திட்டம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் வரலாறு, சமூக முக்கியத்துவம் மற்றும் உள்ளூர் அடையாளத்தின் அடிப்படையில் விரிவாக வடிவமைக்கப்படும் .
இயற்பியல் மாற்றங்களைச் செய்வதற்கு முன், அப்பகுதியின் கட்டமைப்பு மற்றும் முக்கியமான இடங்கள் உள்ளிட்ட தகவல்களை ஏஐ மூலம் பகுப்பாய்வு செய்ய முடியுமென நகர மற்றும் ஊரமைப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணை இயக்குநர் டி.பி.ஆர் டாக்டர் முஹம்மட் ஹக்கிமி முகமட் ஹுசைன் தெரிவித்தார்.

சிக்கல்களைக் கண்டறிவது முதல் பல்வேறு வளர்ச்சிச் சூழல்களைச் சோதிப்பது வரை, திட்டமிடல் பணிகளுக்கு ஏஐ பெரிதும் உதவுகிறது.
இது செலாயாங் நகராட்சியின் துல்லியமான திட்டமிடலுக்கு வழிவகுக்கும்.
நகரத்தை நவீனமாக்குகிறோம் என்ற பெயரில் அதன் வரலாற்றுப் பின்னணியைச் சிதைத்துவிடக் கூடாது என்றும், மாறாக அதன் தனித்துவத்தை மேலும் முன்னிலைப்படுத்த ஏஐ உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே அதன் தாக்கங்களை மக்கள் காட்சி வடிவில் பார்த்து தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க இந்தத் தொழில்நுட்பம் உதவும்.
மேலும், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சாலை அமைப்புகளை மேம்படுத்தி, போக்குவரத்து நெரிசல் சிக்கல்களைக் குறைக்க வழிவகை செய்ய முடியும்.
பல நகரங்களில் சென்சார்கள், தரவுத்தளங்கள் மற்றும் சிசிடிவி போன்ற டிஜிட்டல் அடிப்படைகள் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றன.
ஏஐ தொழில்நுட்பம் இந்தத் தரவுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து, சிக்கல்களைக் கண்டறிந்து, எதிர்காலத் தேவைகளைக் கணித்துச் சரியான முடிவுகளை எடுக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு முழுமையான பார்வையை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.






