ஷா ஆலாம், செப் 30 - 7,700 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் ஜாலூர் சிலாங்கூர் (JALUR Selangor) எனப்படும் 2026 -ஆம் ஆண்டிலிருந்து 2035 -ஆம் ஆண்டு வரைக்குமான சாலை, நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தை , இன்று சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடக்கி வைத்தது.
மாநிலத்தின் தற்போதைய மேம்பாட்டுக்கு ஈடாக போக்குவரத்தும் சீராக இருப்பதை உறுதிச் செய்யும் நோக்கத்தை அத்திட்டம் கொண்டுள்ளது.
அந்த திட்டத்தின் கீழ், சிலாங்கூரில் 115 புதிய சாலைகளையும் நெடுஞ்சாலைகளையும் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், அடையாளம் காணப்பட்ட சாலைகளும், சாலை சந்திப்புகளும் சீரமைக்கப்படுமென மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.
" 115 திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றில் 35 புதிய சாலை நிர்மாணிப்புகள் , இரு தட சாலைகளை நான்கு தடங்கள் கொண்ட சாலைகளாக விரிவுப்படுத்தும் 64 தரம் உயர்த்தும் பணிகள் ஆகியவை அடங்குமென" அவர் கூறினார்.
" அந்த சாலை தர உயர்வு பணிகளுக்கான 7,700 கோடி ரிங்கிட் நிதி அனைத்தையும் மாநில அரசாங்கமே ஏற்காது. சில திட்டங்கள் நெடுஞ்சாலையை உட்படுத்தியிருப்பதால் , நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களும் அச்செலவை ஏற்கும்" என அமிரூடின் ஷாரி குறிப்பிட்டார்.
இந்த 10 ஆண்டு கால சாலை , நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் மாநிலத்தின் 12 பகுதிகளை உட்படுத்தியுள்ளது. அதில் ஏரோபொலிஸ் 1 ( KLIA) தீமூர் 1 ( செலாயாங், அம்பாங் மற்றும் கோம்பாக்) , தீமூர் 2 (காஜாங், செமினி, செராஸ் ) முதலிய பகுதிகளும் அடங்கும்.




