ஷா ஆலாம், செப் 29 - பெரும் பாதிப்பை ஏற்படுத்திய 2021 வெள்ளத்திற்கு அலட்சியம், கடமை தவறல் காரணம் என குறிப்பிட்டு அரசாங்கத்துக்கு எதிரான சட்ட வழக்கில், 50 தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்பாளர்கள் வெற்றிப் பெற்றனர்.
அந்தப் பேரிடர் ஏற்படுத்திய சேதத்திற்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்பதாக உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்பாளர்கள் கூட்டரசு அரசாங்கம் மற்றும் இரு மாநில அமைப்புகளுக்கு எதிரான தங்களது புகார்களை நிரூபித்திருப்பதாக நீதித் துறை ஆணையர் ஷோபா ராஜா தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
பேரிடர் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய சட்டப்பூர்வப் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என்பதும், அதைச் செய்யத் தவறினால் பாதிப்பு ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்திருக்க முடியும் என்பதும் நீதிமன்றத்தில் உறுதிச் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளில், மலேசிய அரசாங்கம், தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பின் ( நட்மா -NADMA) தலைமை இயக்குனர், பிரதமர் துறையின் அமைச்சர் (சிறப்புப் பணிகள்), மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (MetMalaysia) தலைமை இயக்குனர் மற்றும் சுற்றுச்சூழல் நீர் வளத் துறை அமைச்சர் ஆகியோர் அடங்குவர்.
மேலும், சிலாங்கூர் நீர்ப்பாசன வடிகால் துறை (JPS) மற்றும் ஷா ஆலாம் மாநகர் மன்றம் (MBSA) ஆகிய அமைப்புகளும் கூட்டரசு அரசாங்கத்துடன் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2021 டிசம்பர் 18-ஆம் தேதி வரலாறு காணாத அளவில் மழை பெய்தப் போதிலும், நிலைமையின் தீவிரத்தைக் கணித்து குடியிருப்பாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறியதாகக் கூறி நட்மா மற்றும் மலேசிய வானிலைத் துறை ஆகிய அமைப்புகளின் செயல்பாட்டுத் தோல்விகளுக்குக் கூட்டரசு அரசாங்கமே பொறுப்பு என நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.
பேரிடர் கால அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், கட்டுப்பாட்டு மையத்தைப் பராமரிக்கவும், மீட்புக் குழுவை திறம்பட பயன்படுத்தவும் நட்மா தவறிவிட்டது.
மேலும், முன்னறிவிப்பு அளவுகோல்கள் இருந்தும் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வெளியிட மலேசிய வானிலைத் துறை தவறியது. அதோடு பேரிடர் நிர்வாக அமைப்பில் பல கடுமையான குறைபாடுகள் இருந்ததாகவும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் வெள்ள அபாயம் குறித்து பொது விழிப்புணர்வு திட்டங்களை நடத்தத் தவறியதும், பேரிடரின் அளவைத் துல்லியமாகக் கணிக்காததும் நிவாரணப் பணிகளில் தாமதத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
தகவல்களைப் பரிமாறிக்கொள்வதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஒருங்கிணைப்பு குறைபாடு காரணமாக மீட்புப் பணிகள் பெரும்பாலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் மக்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன என நீதிபதி ஷோபா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் நீர்ப்பாசன வடிகால் துறை (JPS) தங்களின் உள்கட்டமைப்பு , வடிவமைக்கப்பட்ட திறனைத் தாண்டி மழை பெய்தது என்ற காரணத்தைக் கூறி பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுச் செயல்பாட்டுக்கு வந்ததும், அவற்றை முறையான திறனுடன் பராமரிக்கும், மேம்படுத்தும் மற்றும் இயக்கும் தொடர்ச்சியான கடமை அத்துறைக்கு உள்ளது என்றும், செயல்பாட்டுத் தோல்விகள் இப்பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியுள்ளதால் உள்கட்டமைப்பின் திறனைத் தாண்டிவிட்டது என்ற தற்காப்பு வாதம் போதுமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், நீர்த்தேக்கக் குளங்களும் முதன்மை உள்கட்டமைப்புகளும் சிலாங்கூர் நீர்ப்பாசன வடிகால் துறை கீழ் உள்ளன என்று வாதிட்டு ஷா ஆலாம் மாநகர் மன்றம் (MBSA) தனது பொறுப்புகளைத் தவிர்க்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
உள்கட்டமைப்பின் உரிமையாளர் யாராக இருந்தாலும், தெரு, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டங்களின் கீழ் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பொது வடிகால் அமைப்பைப் பராமரிக்கும் உள்ளூர் அதிகாரத்துவ தரப்பின் கடமை நீங்கிவிடாது என்று ஷோபா கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிப்பதற்கான விசாரணைத் தேதியை முடிவு செய்ய, நீதிமன்றம் வரும் அக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை அன்று வழக்கு நிர்வகிப்பு நாளாகக் குறிப்பிட்டுள்ளது.





