கோலா லங்காட், செப் 29 : ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிகளின் (single-use plastics) பயன்பாடு தொடர்பாக, கடுமையான அமலாக்கத்தை நோக்கமாகக் கொண்ட துணைச் சட்டங்களை (Undang-Undang Kecil ) அமல்படுத்தும் முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழவுள்ளது.
இந்தத் துணைச் சட்டத்தின் வரைவு தற்போது மாநில சட்ட ஆலோசகர் அலுவலகத்தில் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு இது குறித்த கூடுதல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு சற்று காலம் எடுக்கும் என்றும் மாநில சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
"இந்தத் துணைச் சட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இது அங்கீகரிக்கப்பட்டால், இதை அமல்படுத்தும் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்கும்.
எனவே, இதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு நான் சட்ட ஆலோசகரைச் சந்திப்பேன். தற்போது வரை நாம் இந்தத் துணைச் சட்டப் பிரிவில்தான் சற்று கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தெலுக் பாங்லிமா காராங் சுதந்திர தொழில்துறைப் பகுதியில் உள்ள ரெனேசாஸ் செமிகண்டக்டர் (Renesas Semiconductor KL Sdn Bhd) நிறுவனத்தின் சூரிய ஆற்றலில் இயங்கும் வாகன நிறுத்துமிடத் திட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பிறகு அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து விற்பனை நிலையங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட 20 சென் நெகிழிப் பை கட்டணம் வசூலிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அமலாக்க முயற்சிகளில் இந்த புதிய சட்டம் கவனம் செலுத்தும் என்று ஜமாலியா மேலும் கூறினார்.
கடந்த 2020 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்ட நெகிழிப் பை கட்டணத் திட்டத்தின் மூலமாக வசூலிக்கப்படும் 20 சென் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மாநில அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினருமான அவர் விளக்கினார்.
"கட்டண உயர்வு இருக்கும் என்று நாங்கள் இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் மிக முக்கியமானது என்னவென்றால், அந்த 20 சென் மதிப்பு கட்டாயமாக வசூலிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்.
யாராவது அந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், அதற்கு எதிராகத் தொடர் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய இனி நம்மிடம் சட்டம் இருக்கும்.
அனுமதி மற்றும் உரிமங்களுடன் தொடர்புடைய இன்னும் கடுமையான அமலாக்கத்தை நாங்கள் மேற்கொள்வோம்," என்று அவர் கூறினார்.
கடந்த மார்ச் மாதம், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிகளைக் குறைப்பதற்கான செயல்பாட்டுத் திட்டம் இறுதி செய்யப்பட்டப் பிறகு, சிலாங்கூரில் நெகிழிப் பைக்கான கட்டணம் தற்போதைய 20 சென்னிலிருந்து உயர்த்தப்படலாம் என்று ஜமாலியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.




