கோலாலம்பூர், செப் 29 - 2030-இல், இபிஃஎப் சந்தாதாரர்களில் பத்தில் 6 உறுப்பினர்கள் , ஓய்வூதியத்துக்கான அடிப்படை சேமிப்பான 3 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் சேமிப்பாவது வைத்திருக்க மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போதைக்கு பத்தில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே, அந்த இலக்கை எட்டுவதற்கான சரியான தடத்தில் இருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கோலாலம்பூரில், அனைத்துலக சமூக நல்வாழ்வு மாநாட்டின் போது, பிரதமர் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
அவரது உரையை இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் வாசித்தார்.
" நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் தற்போது பாரம்பரிய வழக்கமான வேலை துறைக்கு அப்பாற்பட்ட துறைகளில் வேலை செய்கின்றனர். வழக்கமான அந்த வேலை முறைக்கே நாட்டின் சமூக பாதுகாப்பு கிடைக்கின்றது.
எனவே, அந்த ஓய்வுகால சேமிப்பை எட்டுவதும் ஒரு சவாலாக இருக்கிறது " என பிரதமர் கூறினார்.
ஆதலால், நாட்டின் சமூக பாதுகாப்பு முறையும், மாறிவரும் தொழில் முறைகளுக்கு ஏற்ப மேம்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
" இதற்கு மத்தியில், சட்டம் இயற்றுபவர்கள் அடுத்த 30 ஆண்டு காலத்தை வரையறையாகக் கொண்டு ஓய்வூதியத் திட்டத்தை வரைகின்றனர்.
ஆனால், மக்களோ அடுத்த ஒரு மாதத்திற்கான செலவுகளை எப்படி ஈடு கட்டுவது என்ற சிரமத்தில் உள்ளனர். இது மக்கள் நிதி அறிவைப் பெற்றிருக்கவில்லை என அர்த்தமாகாது. இது அவர்களின் நிதி பலத்தை சார்ந்து உள்ளது " என அன்வார் கூறினார்.
மேலும், ஓய்வூதியப் பாதுகாப்பு என்பது வருமானம், நல்ல வேலை மற்றும் தொடர்ச்சியாகச் சேமிக்கும் திறன் ஆகியவற்றில் இருந்தே தொடங்குகிறது;
அதே வேளையில், ஓய்வூதியத்திற்கான திட்டங்கள் ஊதிய உயர்வுக்கான திட்டங்களோடு இணைந்தே பயணிக்க வேண்டும் என்வார் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், மலேசியாவுக்கு ஒவ்வொரு கட்டங்களுக்கான பராமரிப்பு அமைப்பு தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இதில் சமூக ஆதரவு, சத்தான உணவு மற்றும் வீட்டிலேயே பராமரிப்பு உதவி வழங்குவது முதல், பகல்நேர பராமரிப்பு மையம், வீட்டுப் பராமரிப்பு மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் அல்லது நினைவாற்றல் இழப்பு நோயால் (dementia) பாதிக்கப்பட்டவர்களுக்கான முதியோர் இல்ல பராமரிப்பு வரை அனைத்தும் அடங்கும் என்றாரவர்.



