புத்ராஜெயா,செப் 29 : தபால் மூலம் மருந்து விநியோகிக்கும் திட்டத்திற்கு, அதிகாரப்பூர்வமற்ற வழிகள் மூலமாகப் பதிவு செய்து தருவதாகக் கூறி கட்டணம் வசூலிக்கும் நபர்களிடம் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தபால் மூலம் மருந்து அனுப்பும் திட்டத்திற்கான பதிவு சுகாதார அமைச்சின் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படும்.
டிக்டாக் (TikTok) அல்லது ஃபேஸ்புக் (Facebook) போன்ற சமூக ஊடகத் தளங்கள் மூலம் இதனைச் செய்ய முடியாது என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"அமைச்சின் நேரடி வழிமுறையைத் தவிர வேறு எந்தப் பதிவு முறையும் இல்லை. மேலும், அக்டோபர் 1 முதல் இலவச மருந்து விநியோகமும் தொடங்கும்," என்று அவர் இன்று (செவ்வாய்க்கிழமை செப் 29) இத்திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அக்டோபர் 1 முதல் தொடங்கவுள்ள இந்த இலவச அஞ்சல் மருந்து விநியோகம் செய்யும் முயற்சி, சுமார் 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படும்.
மருந்துகளை விநியோகிப்பதற்கான செலவு முழுவதையும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) மூலம் அரசாங்கமே ஏற்கும்.
இத்திட்டம் 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதற்கு முன்பு இச்சேவை பயனர்களிடமிருந்து, தீபகற்ப மலேசியாவில் 5 ரிங்கிட் 70 சென்னும் சபா, சரவாக்கில் 12 ரிங்கிட் 50 சென்னும் விநியோகக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது .
“ஓராண்டு காலத்தில் நாடு முழுவதும் சுமார் 87,000 பதிவுசெய்யப்பட்ட நோயாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இத்திட்டம் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்திருந்தார்.
“மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே அவர்கள் சுகாதார மையங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.
“எனவே, செலவு, நேரம் மற்றும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில், இது அவர்களின் பணிகளை மிகவும் எளிதாக்கும்.
இதனைத்தான் நாங்கள் மேம்படுத்தவும், தொடர்ந்து பலப்படுத்தவும் விரும்புகிறோம்.
மிக முக்கியமாக, இது மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் ஏற்படும் நெரிசலையும் சுமையையும் குறைக்க உதவும்,” என்று அவர் கூறினார்.



