ஃபிஃபா ஆசியான் கிண்ணம்: மலேசியா - இந்தோனேசியா இடையிலான ஆட்டம் கோலின்றி சமநிலை

28 செப்டெம்பர் 2026, 3:32 PM
ஃபிஃபா ஆசியான் கிண்ணம்: மலேசியா - இந்தோனேசியா இடையிலான ஆட்டம் கோலின்றி சமநிலை
ஃபிஃபா ஆசியான் கிண்ணம்: மலேசியா - இந்தோனேசியா இடையிலான ஆட்டம் கோலின்றி சமநிலை
ஃபிஃபா ஆசியான் கிண்ணம்: மலேசியா - இந்தோனேசியா இடையிலான ஆட்டம் கோலின்றி சமநிலை

ஜகார்த்தா, செப் 28: கெலோரா புங் கர்ணோ (Gelora Bung Karno) மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற 2026 ஃபிஃபா ஆசியான் கிண்ணத்தின் (FIFA ASEAN Cup 2026) பிரிவு 1, குரூப் ஏ போட்டியில், 10 வீரர்களுடன் விளையாடிய இந்தோனேசிய அணிக்கு எதிரான ஆட்டத்தை மலேசியா 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடித்தது.

மிகவும் பரபரப்பாக நகர்ந்த முற்பாதியின் 37-வது நிமிடத்தில், இந்தோனேசியாவின் மத்திய திடல் தற்காப்பு ஆட்டக்காரர் தாம் ஹே (Thom Haye), வீடியோ உதவி நடுவர் (VAR) ஆய்வுக்குப் பிறகு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால்இந்தோனேசியா 10 வீரர்களுடன் விளையாட வேண்டியிருந்தது.

ஆட்டத்தின் 3-வது நிமிடத்திலேயே இந்தோனேசியாவின் ஜஸ்டின் ஹப்னர் (Justin Hubner) ஒரு கோல் அடித்தார்.

ஆனால், அதற்கு முன்னதாக அவர் தவறு (foul) செய்ததாகக் கூறி நடுவரால் அந்த கோல் மறுக்கப்பட்டது.

12-வது நிமிடத்தில் மலேசியாவின் ஆரிஃப் ஐமான் (Arif Aiman) நடுக்களத்தில் இருந்து தனியாகப் பந்தைக் கடத்திச் சென்று கோல் அடிக்க முயன்றார்.

ஆனால் இந்தோனேசிய கோல்கீப்பர் மார்டன் பேஸ் (Maarten Paes) அதைத் தடுத்து நிறுத்தினார்.

34-வது நிமிடத்தில் ஆரிஃப் ஐமானை மிதித்ததற்காக தாம் ஹேவுக்கு முதலில் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இது இந்தோனேசிய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

பின்னர், தென் கொரிய நடுவர் கோ ஹியுங்-ஜின் (Ko Hyung-jin) இந்தச் சம்பவத்தை மீண்டும் ஆய்வு செய்து, மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அதை சிவப்பு அட்டையாக மாற்றினார்.

அதன்பின், முற்பாதியின் கூடுதல் நேரத்தில் இந்தோனேசிய வீரர் டீன் ஜேம்ஸ் (Dean James) அடித்த பந்தை, மலேசியாவின் கோல்கீப்பர் அகமது சிஹான் ஹாஸ்மி (Ahmad Syihan Hazmi) மிகச் சிறப்பாகத் தடுத்து நிறுத்தினார்.

அதைத் தொடர்ந்து கிடைத்த கார்னர் வாய்ப்பில் எல்கன் பாகோட் (Elkan Baggott) தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியதால் , முற்பாதி கோல் ஏதுமின்றி முடிந்தது.

பிற்பாதியில் இடைக்கால தலைமை பயிற்சியாளர் டான் செங் ஹோ (Tan Cheng Hoe) தலைமையிலான ஹரிமாவ் மலாயா (Harimau Malaya) அணி தனது வியூகத்தை மாற்றியது.

54-வது நிமிடத்தில் முகமது ஃபைசல் அப்துல் ஹலிமுக்கு பதிலாக பவுலோ ஜோசுவே (Paulo Josue) களம் இறக்கப்பட்டு, பெர்க்சன் டா சில்வாவுடன் இணைந்து விளையாடினார்.

64-வது நிமிடத்தில் மானுவல் ஹிடால்கோ இடதுபுறத்தில் இருந்து கொடுத்த கிராஸை (cross) ஜோசுவே தலையால் முட்டினார்.

ஆனால் அது நூலிழையில் பார்-க்கு (bar) மேலே சென்றது.

74-வது நிமிடத்தில் மாற்று வீரராக வந்த பெர்கஸ் டைனிக்கு (Fergus Tierney) கோல் அடிக்க ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது; ஆனால் அவரும் பந்தை பாருக்கு மேலே அடித்து வாய்ப்பை வீணடித்தார்.

ஆட்டத்தின் பாதிக்கும் மேலான நேரம் மலேசியாவுக்கு கூடுதல் வீரர்கள் பலம் இருந்தபோதிலும், இந்தோனேசியாவின் வலுவான தற்காப்பு ஆட்டத்தால் மலேசியாவால் கோல் அடிக்க முடியவில்லை.

இறுதியில் ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிவுற்றது.

மலேசியா தனது அடுத்த கடைசி குழு நிலையிலான ஆட்டத்தில் சிங்கப்பூரை எதிர்கொள்ளும்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.