மதுரை, செப் 28: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை தொடங்கினர்.
பொது சுகாதார அமைப்பின் மீதான நம்பிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் விஜய் தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சுமார் 143 அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
திருமணங்கள் மற்றும் மத சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம், தலைமுறைகளைக் கடந்து பாதுகாக்கும் ஒரு சொத்தாகப் பார்க்கப்படுகிறது.
"இந்த தங்க மோதிரம் குழந்தைக்கு வரும் ஆண்டுகளில் பாதுகாத்து வைப்பதற்கான ஒரு மதிப்புமிக்க பொருளாக இருக்கும்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத மதுரை மாவட்ட அரசு மருத்துவமனையில் குழந்தையைப் பிரசவித்த தாய் ஒருவர் கூறினார்.
இந்த பரிசைப் பெறுவதற்காக தங்களது குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி வரிசையில் காத்திருந்த தாய்மார்களில் அவரும் ஒருவர்.
7.2 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில், தாய்-சேய் நலப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் செலுத்துவதோடு, பொது சுகாதார நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதையும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது .
இருப்பினும், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து (BJP) இந்தத் திட்டம் சில விமர்சனங்களை எதிர்கொண்டது.
"புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான், ஆனால் குடும்பங்களுக்கு அன்றாட அத்தியாவசிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதே மிக அவசரமான தேவையாகும்" என்று அக்கட்சியின் உறுப்பினர் தமிழிசை சௌந்தரராஜன் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நெரிசல் மிகுந்த அரசு மருத்துவமனைகள் பெரும்பாலும் ஊழியர் பற்றாக்குறை, நீண்ட காத்திருப்பு நேரங்கள் மற்றும் குறைபாடான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் திணறுகின்றன.
இதனால் பல நோயாளிகள் அதிக செலவுடைய தனியார் துறையில் சிகிச்சை பெற தூண்டப்படுகிறார்கள்.
இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் மருத்துவமனைகளில் பிரசவித்தாலும், சில கிராமப்புற சமூகங்களில் இன்னும் வீடுகளிலேயே பிரசவங்கள் நடக்கின்றன.
இதனால் மருத்துவமனைகளில் பிரசவம் நடப்பதை உறுதி செய்வதற்கு சுகாதார அதிகாரிகள் முன்னுரிமை அளிக்கின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் குழந்தை மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் இன்னும் கவலைக்குரியதாகவே உள்ளது.
அண்மைய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நாட்டில் 1,000 குழந்தை பிறப்புகளுக்கு 24 குழந்தை இறப்புகளும், 1,00,000 குழந்தைகள் பிறப்புகளுக்கு 88 தாய்மார்கள் இறப்புகளும் பதிவாகியுள்ளன.
"தாய்மாமன்" தங்க மோதிரத் திட்டம், ஒரு குழந்தையின் தாய்மாமனுக்கு இருக்கும் சிறப்பு கலாச்சார முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இது, தங்கத்தின் மீது இந்தியாவுக்கு இருக்கும் நீங்காத ஈர்ப்பையும் வெளிப்படுத்துகிறது.
உலகில் தங்கத்தை மிக அதிகமாக நுகரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.



