பெட்டாலிங் ஜெயா, செப். 27 – சிலாங்கூர் மாநில மாற்றுத்திறனாளிகள் (OKU) சமூகத்திற்கான ஆதரவை வலுப்படுத்த RM5 மில்லியன் நிதி திரட்டும் சிறப்பு நிதி இயக்கத்தை சிலாங்கூர் தொடங்கியது.
இதனை சிலாங்கூர் தெங்குப் பெர்மைசூரி நோராஷிகின் நேற்று தொடக்கி வைத்தார்.
ஒரு வருட காலத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ள இந்த நிதி திரட்டும் இயக்கம், Yayasan Insan Istimewa Selangor (YANIS) அமைப்பின் நிதி திரட்டும் விருந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சிலாங்கூர் பெண்கள் மேம்பாடு மற்றும் நலவாழ்வு விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி, சிலாங்கூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் நலன் மற்றும் ஆற்றலை மேம்படுத்துவதற்காக YANIS பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
அதில், Independent Living Support Centre (ILSC) வாயிலாக இலக்குக் குழுவினரின் திறன்களையும் ஆற்றல்களையும் மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அதேவேளை, Bantuan Rahmah Insan Istimewa (BRAIS) மற்றும் ANIS Centre வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கான நலன் மற்றும் பராமரிப்பு தொடர்பான திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான நீண்டகால ஆதரவு கட்டமைப்பை உருவாக்கும் வகையில் Cerebral Palsy Care Unit (CPCU) மற்றும் YANIS Academy ஆகியவற்றின் வாயிலாக ஆதரவையும் வழங்கி வருவதாக அன்ஃபால் கூறினார்.
இதனிடையே, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு வழிகாட்டுவதற்காக Special Children’s Parents’ Module (MANIS) திட்டத்தையும் YANIS தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் வாயிலாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் திறன்களையும் ஆற்றல்களையும் மேம்படுத்துவதற்கு வழிகாட்டுதல் வழங்கப்படுகின்றன.
பெருநிறுவனங்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் தங்களது நிபுணத்துவம், வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதுடன், பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பங்களிக்க வேண்டும் என அன்ஃபால் கேட்டுக்கொண்டார்.



