நாட்டின் மலாய் திரைப்பட முன்னோடி எல். கிருஷ்ணன் 104-வது வயதில் காலமானார்

25 செப்டெம்பர் 2026, 10:30 AM
நாட்டின் மலாய் திரைப்பட முன்னோடி எல். கிருஷ்ணன் 104-வது வயதில் காலமானார்

ஷா ஆலாம், செப் 25 : மலாய் திரைப்படத்துறையின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவரும், 2016-ஆம் ஆண்டின் மெர்டேகா விருது (Merdeka Award) பெற்றவருமான தேசிய திரைப்படத்துறை ஆளுமை தான் ஸ்ரீ எல். கிருஷ்ணன், நேற்று (செப்டம்பர் 24, வியாழக்கிழமை) தாய்லாந்தின் சியாங் மாயில் (Chiang Mai) காலமானார். அவருக்கு வயது 104.

அவரது மறைவை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (Finas) தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அஸ்மிர் சைஃபுதீன் முத்தலிப் உறுதிப்படுத்தினார்.

மலேசியாவின் மூத்த கலைஞர்கள் அறக்கட்டளை மூலம் இந்தத் தகவல் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அஸ்மிர் கூறினார்.

கிருஷ்ணன் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.15 மணிக்கு முதுமை காரணமாக காலமானார்.

"அவர் தாய்லாந்து நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு நீண்ட காலமாக அந்நாட்டில் வசித்து வந்தார். தற்போது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன," என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

நாட்டின் நவீன திரைப்படத் துறைக்கு அடித்தளம் அமைத்ததற்கும்,மறைந்த தான் ஸ்ரீ பி.ரம்லி உள்ளிட்ட ஆரம்பகால நடிப்புத் திறமையாளர்களை வளர்த்தெடுத்ததற்கும், கல்வி மற்றும் சமூகத்திற்கான சிறந்த பங்களிப்புப் பிரிவில் கிருஷ்ணனுக்கு 2016-ஆம் ஆண்டுக்கான மெர்டேகா விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் மெட்ராஸில் (சென்னை) 1922-இல் பிறந்து பினாங்கில் வளர்ந்த கிருஷ்ணன், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு திரைப்படத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர், 1949-இல் சிங்கப்பூருக்குச் சென்று ஷோ ஸ்டுடியோவில் (Shaw Studio) திரைப்பட இயக்குநராகப் பணியாற்றினார்.

ஷோ பிரதர்ஸ் (Shaw Brothers) நிறுவனத்தில், மறைந்த தான் ஸ்ரீ பி. ர்ம்லியின் வாழ்க்கை முன்னேற்றத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் அந்த யுகத்தின் முக்கிய திரைப்பட ஆளுமைகளான மறைந்த டத்தோ மரியா மெனாடோ, மறைந்த காஸ்மா பூட்டி மற்றும் மறைந்த டத்தோ முஸ்தபா மாரோஃப் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

தனது திரைப்பயணத்தில் கிருஷ்ணன் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இதில் பி.ரம்லி நடித்த பக்தி (Bakti) மற்றும் தக்டிர் இலாஹி (Takdir Ilahi -இரண்டும் 1950), பெங்ஹிடுப்பான் (Penghidupan - 1951) மற்றும் அந்தாரா செஞும் டான் தகிஸ் ( Antara Senyum dan Tangis-1952) போன்ற திரைப்படங்கள் அடங்கும்.

அவர் ஒராங் லிச்சின் (Orang Lichin-1957), ஒராங் மின்யாக் (Orang Minyak-1958) மற்றும் செரங்கான் ஒராங் மின்யாக் (Serangan Orang Minyak-1959) ஆகியவற்றின் மூலம் திகில் வகைத் திரைப்படங்களிலும் கால் பதித்தார்.

அதே நேரத்தில் பாடல், நடனம் மற்றும் நாடகம் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு அவர் தயாரித்த படங்கள் அந்த நேரத்தில் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

சிங்கப்பூரில் 11 ஆண்டுகள் பணியாற்றியப் பிறகு, கிருஷ்ணன் கோலாலம்பூரில் உள்ள மெர்டேகா ஸ்டுடியோவுடன் (Merdeka Studio) தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

மலேசியா உருவான ஆரம்ப ஆண்டுகளில் சமூகத்தின் வாழ்க்கை மற்றும் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் பல திரைப்படங்களைத் தயாரித்தார்.

மெர்டேகா ஸ்டுடியோவில் அவரது பணியும் பங்களிப்பும் மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (Finas) நிறுவப்படுவதற்கும் வழிவகுத்தது.

உள்ளூர் திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில் அசல் மெர்டேகா ஸ்டுடியோ வளாகம் தற்போது ஃபினாஸால் (Finas) பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இயக்குவதைத் தாண்டி, கிருஷ்ணனின் பங்களிப்புகள் 1970-இல் 'காயா ஃபிலிம்' (Gaya Filem Bhd) மற்றும் 1980-இல் 'காயா மியூசிக் ஸ்டுடியோ' (Gaya Music Studio) ஆகியவற்றை நிறுவியதன் மூலமும், உள்ளூர் திரைப்படத் துறைக்கான தொழில்நுட்ப வசதிகளின் வளர்ச்சியில் ஈடுபட்டதன் மூலமும் விரிவடைந்தது.

1982-ஆம் ஆண்டில், நாட்டின் முதல் திரைப்பட வண்ண ஆய்வகத்தை (Film colour laboratory) நிறுவிய அவர், பின்னர் 1984-இல் கேத்தே ஆர்கனைசேஷன் மலேசியாவின் (Cathay Organisation Malaysia) தலைவராக நியமிக்கப்பட்டார்.

தனது நீண்டகால திரைப்பயணத்தில் கிருஷ்ணன் 1995-இல் பி. ரம்லி விருது மற்றும் 1996-இல் மலாய் சினிமா கேலரி விருது உட்பட பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.

அவர் பாங்லிமா ஜாசா நெகாரா (2003), சர்வதேச தமிழ் திரைப்பட விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது, 2003), பாங்லிமா செத்தியா மஹ்கோட்டா (2011), ஸ்ரீ தெமாசெக் விருது (2011), மலேசிய திரைப்பட ஆளுமை விருது (2011 & 2014) மற்றும் தென்னிந்திய ஒளிப்பதிவு விருது (2015) உள்ளிட்ட பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.