ஷா ஆலம், செப் 25 : 500-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்க்கும் அனைத்து கோழிப் பண்ணையாளர்களும், மூடிய வளர்ப்பு முறையைப் பயன்படுத்தும் ஒரு சிறப்பு மண்டலத்திற்குள் இயங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் கடுமையான கண்காணிப்பின் கீழ் அந்த பகுதி செயல்படுத்தப்படுவதாக விவசாயத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.
துர்நாற்றம் மற்றும் ஈக்கள் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தி, மக்களின் நிம்மதியை உறுதி செய்வதற்காக மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கினார்.
" இனிமேல் கோழிப்பண்ணைகளுக்கு ஒரு சிறப்பு மண்டலம் இருக்கும். பெரிய இடவசதி இல்லாத குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இந்த திட்டத்தில் ஒரு 'தாங்கல் பகுதி' (buffer zone) இருப்பது கட்டாயமாக்கப்படும்.
பண்ணை வளர்ப்பு பகுதி, குடியிருப்புகளில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்,அப்போதுதான் நாங்கள் அனுமதிப்போம். மக்கள் வீடுகளுக்கு மிக அருகில் இருந்தால், பண்ணை இயங்க அனுமதிக்கப்படாது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
கடந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த 'மண்டல (Zon)அமைப்பு', உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் துர்நாற்றம், ஈக்கள் போன்ற தொல்லைகளின் அபாயத்தைத் தவிர்க்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
எனவே, இந்த மாநிலத்தில் இன்னும் இந்த மண்டலத்திற்கு வெளியே இயங்கி வரும் அனைத்து கோழிப்பண்ணையாளர்களும் உடனடியாக மூடிய வளர்ப்பு முறையைப் பின்பற்றும் சிறப்பு இடத்திற்கு மாற வேண்டும் என்று அவர் கூறினார்.
"இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஆன நிலையில், குறிப்பாக புதிய பண்ணையாளர்களிடையே பல மூடிய பண்ணை முறைகள் செயல்படுத்தப்பட்டதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
ஏற்கனவே உள்ள மூடிய பண்ணைகளும் பல உள்ளன. இந்த எஞ்சியிருக்கும் ஓராண்டு காலத்தில், நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, இன்னும் இந்த முறையைச் செயல்படுத்தாத பண்ணையாளர்களை நாங்கள் கண்டறிந்து பரிசீலிப்போம்," என்றார்.
இடம்பெயர்வு முறை குறித்து மேலும் விரிவாகப் பேசவும், தற்போதைய முன்னேற்றத்தை மதிப்பிடவும் அக்டோபர் மாதத்தில் பண்ணையாளர்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுடன் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என்று இஷாம் விளக்கினார்.
பண்ணையாளர்கள் 2028-ஆம் ஆண்டிற்குள் தீர்வு காணத் தவறினால், பண்ணைகளைப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
"இந்த கடுமையான நடவடிக்கை ஏற்கனவே கோலா லங்காட் போன்ற சில பண்ணையாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி ஒரு முக்கிய புரதச் சத்து என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான மற்றவர்களின் உரிமையை மறுப்பதற்கு இதை ஒரு காரணமாகக் கூற முடியாது. நாம் இணைந்து முன்னேற, நல்ல சுற்றுச்சூழல் நிர்வகிப்பின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துவோம்," என்றார்.
மாநிலத்தில் மொத்தம் 409 கோழிப்பண்ணைகள் உள்ளதாகவும், அவற்றில் 235 பண்ணைகள் முறையான உரிமம் பெற்றுள்ளதாகவும், 174 பண்ணைகள் உரிமம் இன்றி இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இடப்பற்றாக்குறை என்பது முக்கிய பிரச்சனை அல்ல, மாறாக முறையான பண்ணை நிர்வகிப்பு நடைமுறைகளே சுற்றுச்சூழல் மாசு அபாயத்தைத் தீர்மானிக்கின்றன என இஷாம் கூறினார்.
"சபாக் பெர்னாமில் ஒரு பண்ணை உள்ளது. அது மிகவும் அழகாகவும், மூடப்பட்டதாகவும், நவீனமாகவும் உள்ளது, ஆனால் ஈக்கள் பிரச்சனை இருந்தது.
ஆராய்ந்தபோது, அந்த பண்ணையில் கோழிக் கழிவுகளை நிர்வகிப்பதில் சிறந்த நிர்வாகம் இல்லை என்பதைக் கண்டறிந்தோம். அந்த பண்ணை மூடப்படும் நிலைக்குச் சென்றது, ஆனால் நாங்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்கி உதவியபோது, அது மீண்டும் இயங்கத் தொடங்கியது.
இப்போது துர்நாற்றம் மற்றும் ஈக்கள் பிரச்சனை இல்லை. இதையே நாங்கள் அனைத்து கோழிப்பண்ணைகளிலும் செய்ய விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக, கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட துர்நாற்றம் மற்றும் ஈக்கள் தொல்லை மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்தல், பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன.





