புத்ராஜெயா,செப் 24 : கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும்போது பயனீட்டாளருக்கு எந்தவொரு நிபந்தனையையும் விதிக்கக் கூடாது என வணிகர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர், செமினியிலுள்ள (Semenyih) ஒரு சூப்பர் மார்க்கெட்டில், 1 கிலோகிராம் பாக்கெட் சமையல் எண்ணெயை வாங்குவதற்கு நிபந்தனை விதிப்பதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து , உள்நாட்டு வர்த்தக- வாழ்க்கைச் செலவின அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்தது.
" பயனீட்டாளர் 1 கிலோகிராம் பாக்கெட் சமையல் எண்ணெயை வாங்க வேண்டுமானால், அந்த சூப்பர் மார்க்கெட்டில் குறைந்தபட்சம் 300 ரிங்கிட் மதிப்பிலான பிற பொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது" என உள்நாட்டு வர்த்தக- வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ அஸ்மான் ஆடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சின் அமலாக்க அதிகாரிகளின் குழுவினர் சாதாரண உடையில் சென்று, அந்த வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கினர்.
அப்போது,சமையல் எண்ணெய் பாக்கெட்டை வாங்குவதற்கு முன்னதாகப் பிற பொருட்களை வாங்க வேண்டும் என்ற நிபந்தனை அமைச்சின் அதிகாரிகளுக்கும் விதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
" உள்நாட்டு வர்த்தக- வாழ்க்கைச் செலவின அமைச்சின் அதிகாரிகள் 303 ரிங்கிட் 65 சென் மதிப்பிலான பிற பொருட்களை வாங்கிய பிறகே, மொத்தம் 42 ரிங்கிட் 50 சென் விலையுள்ள 17 பாக்கெட் சமையல் எண்ணெய்களை வாங்க அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணைக்கு உதவும் வகையில் இந்த ஒட்டுமொத்த பரிவர்த்தனையும், சம்பவமும் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று டத்தோ அஸ்மான் ஆடம் கூறினார்.
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும்போது நிபந்தனைகளை விதித்ததன் அடிப்படையில், 1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (சட்டம் 122) பிரிவு 19-இன் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.



