ஷா ஆலாம், செப் 24: கூட்டரசு நெடுஞ்சாலையின் மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதையில், பல மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் அடுத்தடுத்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து பொதுப்பணித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அச்சம்பவம் நடந்தபோது லேசான மழை காரணமாகச் சாலை சற்று ஈரமாக இருந்ததாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
எனினும், விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. "இந்த விபத்துக்குப் பல காரணங்கள் இருக்கலாம். இது முற்றிலும் சாலையின் மேற்பரப்பினால் மட்டுமே ஏற்பட்டதாக இருக்காது. விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடந்து வருகிறது.
அவர்கள் சற்று அதிவேகமாகச் சென்றார்களா அல்லது அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததா என்று எங்களுக்குத் தெரியவில்லை. விபத்துக்கான உண்மை காரணம் என்ன என்பதை நாங்கள் இன்னும் ஆராய்ந்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.
பொதுப் பணித் துறை ஏற்கனவே விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த காரணங்களைக் கண்டறிய விசாரணையைத் தொடங்கியுள்ளது என நந்தா லிங்கி குறிப்பிட்டார்.
முன்னதாக, கூட்டரசு நெடுஞ்சாலையின் மோட்டார் சைக்கிள் பாதையில் உள்ள பச்சை நிறத்திலான ஈரமான சாலையில் பயணித்தபோது, பல மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் விழுந்ததாகக் கூறப்படும் 42 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்ததளத்தில் பகிரப்பட்டு வைரலானது.



