ஷா ஆலாம்,செப் 24: குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் மற்றும் தொழில்முறை பராமரிப்பாளர்களை (Professional Caregivers) இலக்காகக் கொண்ட சிலாங்கூர் பராமரிப்புப் பயிற்சித் திட்டம் (Caregiving Training Module), அடுத்தாண்டு மத்தியில் அல்லது மூன்றாவது காலாண்டின் இறுதியிலோ முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'தி ஆசியா பவுண்டேஷன்' (The Asia Foundation) அமைப்புடன் இணைந்து இந்த விரிவான பயிற்சித் திட்டம் வரையப்படும்.
பராமரிப்பின் பல்வேறு பிரிவுகளுக்கு ஏற்ப பயிற்சி உள்ளடக்கங்கள் உருவாக்கப்படும்.
பராமரிப்புத் துறையின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக, இந்த பயிற்சித் திட்டம் உணர்ச்சி, உடல் மற்றும் மனநல அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
மேலும், பராமரிப்பாளர்களுக்குத் தேவையான திறன்கள், அறிவு மற்றும் தகுதி ஆகிய கூறுகளை இது கொண்டிருக்கும் என்றும் அவர் விளக்கினார்.
"இந்தப் பராமரிப்புப் பயிற்சித் திட்டம் தற்போது விவாதக் கட்டத்தில் உள்ளது.
இதனை நாங்கள் மூன்று கட்டங்களாகப் பிரிப்போம். முதல் கட்டமாக தரவு வரைபடமாக்கலை மேற்கொள்வோம்.அதன் பிறகு, உணர்ச்சி, உடல் மற்றும் மனநலக் கண்ணோட்டத்திலான பராமரிப்பு உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு வரைவை உருவாக்குவோம். இறுதியாக இது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்," என சமூக நலனுக்கான மாநில ஆட்சிக் குழு (EXCO) உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
இணையம் வழியாக அணுகக்கூடிய இந்த பயிற்சித் திட்டம் , வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கவனித்துக்கொள்ளும் குடும்ப உறுப்பினர்களை மையமாகக் கொண்டது என அன்ஃபால் சாரி மீடியா சிலாங்கூர் செய்தி நிறுவனத்திடம் விளக்கினார்.
தொழில்முறை பராமரிப்பாளர்களாக மாற விரும்பும் நபர்களுக்காக தொழிற்கல்வி (TVET) வடிவிலான பயிற்சிகளும் வழங்கப்படும்.
"குடும்பப் பராமரிப்பாளர்களை இலக்காகக் கொண்டு, பல்வேறு தலைப்புகள் தொடர்பான காணொளி (Video) வடிவிலான பயிற்சிகளை அவர்கள் இணையம் வழியாக அணுக முடியும்.
அதாவது, இவர்கள் பராமரிப்பு இல்லங்கள் அல்லது தொழில்முறை இடங்களில் அல்லாமல், தங்கள் வீடுகளிலேயே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்பவர்கள் ஆவர்.
தொழில்முறை பயிற்சிகளைப் பொறுத்தவரை, இப் படிப்பை முடிக்கும் பங்கேற்பாளர்கள் முதியோர் இல்லங்களிலோ அல்லது தனிப்பட்ட வீடுகளுக்குச் சென்று ஒருவருக்கு ஒருவர் (One-to-one service) என்ற அடிப்படையிலோ தொழில்முறையாகப் பராமரிப்புச் சேவைகளை வழங்கப் பயிற்சி அளிக்கப்படுவார்கள்.

அவர்கள் படித்துப் பட்டம் பெற்ற பிறகு, முதியோர் இல்லங்கள் அல்லது தனிப்பட்ட வீடுகளில் இந்தச் சேவையைத் தொழில்முறையாகச் செய்ய முடியும்," என்று அவர் கூறினார்.
பொருத்தமான சூழலுக்கு ஏற்ப, இந்தப் பயிற்சித் திட்டத்தை ஒரு சான்றிதழ் திட்டமாகவோ அல்லது டிப்ளோமோ படிப்பாகவோ வழங்குவதற்குச் சிலாங்கூர் பல்கலைக்கழகத்துடன் (UNISEL) இணைந்து செயல்படுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (Wanita Berdaya Selangor) மற்றும் தி ஆசியா பவுண்டேஷன் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) மூலம் இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாக உருவாக்கப்படும் என்று அன்ஃபால் கூறியிருந்தார்.
முதல் கட்டத்தில் பாடத்திட்டத்தை உருவாக்குதல் மற்றும் அதனை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவை அடங்கும். இரண்டாம் கட்டத்தில் முன்னோடிப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படும். மூன்றாம் கட்டத்தில் தொழில்முறை சான்றிதழுக்கான பாடத்திட்டத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
தற்போதைய தொழில்துறை தேவைகள் மற்றும் விதிகளுக்கு ஏற்ப இந்த மாதிரியின் உள்ளடக்கங்கள் இருப்பதை உறுதி செய்ய, நிபுணர் குழுவின் மூலம் இந்த பாடத்திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்படும்.




