கோலாலம்பூர், செப் 9 - சிறார்களை உட்படுத்திய பாலியல், ஆபாசப் படங்கள் தொடர்பான 21 லட்சத்துக்கும் அதிகமான கோப்புகளை போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
2024 - ஆம் ஆண்டு தொடங்கி மேற்கொள்ளப்பட்ட ஓப் பெடோ (Op Pedo) , 'சைபர் கார்டியன்'(Operation Cyber Guardian) நடவடிக்கைகளின் மூலம் , 369 சம்பவ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 170 பேர் கைது செய்யப்பட்டதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
" ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கிறது. எனவே தீவிரமான ஒருங்கிணைந்த ஒரு நடவடிக்கை தேவைப்படுகிறது.
தண்டனை ரீதியான நடவடிக்கை மட்டுமல்ல விழிப்புணர்வும் அதிகரிக்கப்பட வேண்டும் " என இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த ஜனவரி முதலாம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 -ஆம் தேதி வரை, தொடர்பு பல்லூடக ஆணையம் , சமூக ஊடகங்களில் இருந்து ஆபாசம், சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பிலான உள்ளடக்கங்களை நீக்குமாறு 12, 529 கோரிக்கைகளைப் பெற்றது.
அதில் தொடர்பு பல்லூடக ஆணையம், 11, 665 உள்ளடக்கங்களை நீக்கியது. 1, 031 இணையத் தளங்களை முடக்கியது .
“அதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க, நிறுவனங்கள் , அரசு சாரா அமைப்புகள், பெற்றோர், மக்கள் ஆகியோரின் தொடர் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது. அந்த அமலாக்கத்தோடு சிறார் மத்தியில் தொழில்நுட்பம், சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் விழிப்புணர்வும் அதிகரிக்கப்பட வேண்டும்” என டத்தோ எம். குமார் தெரிவித்தார்.



