கோத்தா திங்கி, செப் 22 : ஜோகூர், தஞ்சோங் செடிலி கம்புங் பாடாங்-கில் நேற்று ஐந்து வயது சிறுமியை ஆற்றில் தூக்கி வீசியதாக நம்பப்படும் நபரை போலீஸ் ஏழு நாட்களுக்குத் தடுத்து வைத்தது.
கொலை செய்ததற்கான குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் விசாரணை நடத்துவதற்காக, இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹபிஸா அப்துல் ரஜாக், அந்த ஆடவனைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னதாக, கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 வயதுடைய அந்த நபர், நீல நிற சட்டை அணிந்தபடி போலீஸ் பாதுகாப்புடன் காலை 9 மணியளவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
நேற்று காலை, தஞ்சோங் செடிலி, கம்புங் பாடாங் பகுதியில் ஐந்து வயது சிறுமி ஒருவர் அவரது பெரியப்பா அல்லது சித்தப்பாவால் ஆற்றில் வீசப்பட்டு மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அந்த நபர் சிறுமியை ஆற்றில் வீசிய பிறகு, கையில் அரிவாளுடன் 40 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரை துரத்திச் சென்று ரகளையில் ஈடுபட்டார் என கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் யூசோப் ஒத்மான் தெரிவித்தார்.
நேற்று காலை 9.30 மணியளவில் போலீசாருக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தபோது, அந்நபருக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அதில் ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தார், இருப்பினும் அந்த நபர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டார்.
சம்பவ இடத்திலிருந்த மருத்துவ உதவியாளர் சிறுமியின் மரணத்தை உறுதி செய்தார். சிறுமியின் உடல் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் இன்று பிரேத பரிசோதனைக்காக பாசிர் கூடாங் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று யூசோப் தெரிவித்தார்.
கைதான நபர் மனநலப் பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.



