ஷா ஆலாம், செப் 21 : நீர்ப்பாசன, வடிகால் துறை திட்டமிட்டிருக்கும் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான நீர் தேக்கக் குளம், அம்பாங் ஜெயா , ஜாலான் கோலாம் ஆயர் லாமா சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாக அமையவிருக்கின்றது.
மலைப் பாங்கான பகுதிகளில் இருந்து வரும் நீரின் வேகத்தைக் குறைத்து, பின்னர் அதனைத் தாழ்வான பகுதிகளில் உள்ள வடிகால் அமைப்பிற்குச் செலுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்ற உறுப்பினர் முகமட் காம்ரி கமாருடின் தெரிவித்தார்.
இது ஒரு நீண்டகாலத் தீர்வாகும் என்றும் மேலிருந்து கீழே இறங்கும் நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்த மேல் பகுதியில் ஒரு நீர் தேக்கக் குளம் இருப்பது இப்போது மிகவும் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ஒரு கோடியே 50 லட்சம் ரிங்கிட் என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டம் நீர்ப்பாசன, வடிகால் துறையின் திட்டமிடலில் சேர்க்கப்பட்டு ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது;
ஆனால் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் மீடியா சிலாங்கூர் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இப்பகுதியில் வெள்ளப் பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருவதாகவும், வடிகால்களை அகலப்படுத்துவது உள்ளிட்ட சில குறுகிய கால நடவடிக்கைகள் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து நிலைமை மிகவும் மோசமடைந்தது.
வழக்கமாக சுமார் 10 வீடுகள் மட்டுமே வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலையில், இம்முறை வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட கிட்டத்தட்ட 30 இடங்கள் பாதிக்கப்பட்டடன.
நேற்று முன்தினம் பெய்த மழையின் அளவு மிக அதிகம் என்பதால் இப்பகுதி மட்டுமின்றி மற்ற இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.
மேலும், இப்பகுதியில் இரு நீரோட்டங்கள் ஒன்றாகச் சங்கமிப்பதால், அவ்வளவு பெரிய அளவிலான தண்ணீரைத் தாங்கும் திறன் அங்கிருக்கும் வடிகால் அமைப்பிற்கு இல்லை என்றும் அவர் விளக்கினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காம்ரி பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினார்.

அத்துடன், தூய்மைப் பணிகளுக்கு உதவுவதற்காக மனிதவளத்தை ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட மற்றும் நில அலுவலகம் மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஆகியவற்றை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும்,பாதிக்கப்பட்ட மக்களின் முழுமையான தரவுகளைச் சேகரிக்குமாறும், மக்கள் காவல் நிலையங்களில் புகார் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் அவர்களுக்கு என்னென்ன உதவிகளை வழங்க முடியும் என்பதைப் பரிசீலிக்கலாம் என்றார்.
அதே நேரத்தில், வடிகால்களைக் கடந்து செல்லும் பயன்பாட்டுக் குழாய்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் குப்பைகளும் மரக்கட்டைகளும் அதில் சிக்கித் தண்ணீரின் ஓட்டத்தைத் தடுத்துவிடும் என்றும் காம்ரி கூறினார்.
நேற்று முன்தினம், ஜாலான் கோலாம் ஆயர் லாமா பகுதியில் இரு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் வெள்ள நீர் இடுப்பளவு வரை உயர்ந்தது.
இதனால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து சொத்துக்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது.




