கோலாலம்பூர், செப் 20 - சிலாங்கூர், செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரீஸ் ஷா இருதய மருத்துவமனை மையம், ஒரே நாளில் 69 தலையீட்டு இருதயவியல் (Cardiology intervention ) சிகிச்சையைக் கையாண்டது.
அந்த எண்ணிக்கை, சிறப்பு இருதய பராமரிப்புச் சேவையை வழங்குவதில் அம்மையத்தின் ஆற்றலை பிரதிபலித்துள்ளது.
69 இருதய சிகிச்சைகளில், 40 திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளாகும்.
எஞ்சிய 29 அவசர மருத்துவ சம்பங்களாகும். அவற்றில் நான்கு மாரடைப்பு நோயாளிகளை உடனடியாக காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சைகளாகுமென சுகாதார அமைச்சு அதன் x சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டிருந்தது.
சுகாதார அமைச்சின் அனைத்து 10 இருதய மையங்களில், சுல்தான் இட்ரீஸ் ஷா இருதய மருத்துவமனை மையம், மட்டும், 45 விழுக்காடு இருதய தலையீடு சிகிச்சைகளைக் கையாள்கிறது.
சுகாதார அமைச்சு பகிர்ந்துக் கொண்ட பட வரைவில், அம்மையம் 44 அஞ்சியோகிராம் சிகிச்சையையும், ரத்த நாள அடைப்பை நீக்கும் 39 சிகிச்சை நடைமுறைகளையும் மேற்கொண்டது.
மேலும், அல்ட்ராசவுண்ச் ஸ்கேனிங் முறை தேவைப்பட்ட 13 சிக்கலான கரோனரி பாதிப்புக்கான சிகிச்சைகளும் அதில் அடங்கும்.
சுல்தான் இட்ரீஸ் ஷா இருதய மருத்துவமனை மையம் காலை மணி 8-லிருந்து மாலை மணி 6 வரை செயல்படும். அதன் அனைத்து 7 'கேத் லேப்' எனப்படும் இருதய தலையீட்டு சிகிச்சை அரங்குகள் , உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, முழுமையாக செயல்படுகின்றன.
அலுவலக நேரத்திற்குப் பின்னரும் கேத் லேப் அரங்குகள் இரவு பின்னேரம் வரை இயங்கி , சிகிச்சைக்காக காத்திருக்கும் எஞ்சிய சம்பவங்களை கவனிக்கும்.
இந்த சிகிச்சைகளை மேற்கொள்ள 80 மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர்.
அவர்களில் 14 பேர் இருதய நிபுணர்கள் , 6 பேர் மருத்துவர்கள், 10 பேர் கதிரியக்கக தொழில்நுட்ப வல்லுநர்கள், 8 உதவி மருத்துவர்கள், 40 தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் அடங்குவர் .



