லண்டன், செப் 19 - வீடுகளில் வளர்க்கப்படும் வழக்கமான பூனைகளைக் காட்டிலும் உருவத்தில் மிக சிறியதான புதிய இன காட்டுப் பூனை முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இவ்வகை பூனைக்கு தில்காயோ ( Tilcayo ) என உள்ளூர் மக்களால் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த காட்டுப் பூனை பொலிவியாவின் மேகம் சூழ்ந்த யுங்காஸ் மலைக் காட்டினைத் தனது வாழ்விடமாக கொண்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இக்காட்டுப் பூனையின் நீளம் 46 செண்டிமீட்டராகும். அதன் எடை சுமார் 1.4 கிலோகிராமாக உள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் மரபணு தரவைக் கொண்டு, இப்பூனை புதிய இனத்தைச் சேர்ந்தது என உறுதிப்படுத்தினர். மேலும், அதன் உள்ளூர் பெயரைத் தக்க வைத்து 'லியோபர்டுஸ் தில்காயோ' (Leopardus tilcayo) என அறிவியல் பெயரைச் சூட்டியுள்ளனர்.
இப்பூனையின் வாழ்க்கை முறை குறித்து இன்னும் அதிகம் தெரிய வரவில்லை.
இதன் உரோமம் வெளிர் பழுப்பு நிறத்தில் உடல் முழுவதும் ஒழுங்கற்ற வடிவங்களிலான ரோஜாப்பூ போன்ற புள்ளிகளுடன் காணப்படுகிறது என தேசிய புவியியல் ஆய்வாளரும், இந்த புதிய பூனை இனம் குறித்த ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவருமான பாவாலோ நோகலெஸ் -அஸ்காருன்ஸ் தெரிவித்தார்.



