ஷா ஆலாம், செப் 18 : நிர்வாகிக்கான பதவி தருவதாகக் கூறி இணைய வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய 54 வயது நபர் ஒருவர் 39,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி பாதிக்கப்பட்ட நபருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் இந்த வேலை வாய்ப்பு வந்ததாக, காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.
நேர்காணலின் போது அந்தப் பணம் திருப்பித் தரப்படும் என்ற காரணத்தைக் கூறி, பாதிக்கப்பட்ட நபரிடம் பணம் செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
"பாதிக்கப்பட்ட நபர் பின்னர் சந்தேக நபரால் வழங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு பலமுறை பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.
செப்டம்பர் 16, 2026 அன்று, அவர் மொத்தம் 39,000 ரிங்கிட் மதிப்பிலான மூன்று பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபரிடம் மேலும் கூடுதல் பணம் கேட்கப்பட்டபோது, அவர் சந்தேகமடையத் தொடங்கி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் என்று நாஸ்ரோன் கூறினார்.
அதன்பின்னர், அவர் அடுத்தகட்ட பணப்பரிமாற்றங்களைத் தொடரவில்லை என்றும், இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இணையத்தில் விளம்பரப்படுத்தப்படும் வேலை வாய்ப்புகளைப் பொதுமக்கள் எளிதில் நம்ப வேண்டாம் என்றும், எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் சரிபார்க்குமாறும், அத்துடன் 'செமாக் மூலே' (Semak Mule) வலைத்தளத்தின் மூலம் வங்கி கணக்கு எண்களைச் சரிபார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைய நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் 997 என்ற எண் மூலம் தேசிய மோசடி மையத்தை (NSRC) உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



