கிள்ளான், செப் 17: சிலாங்கூரில் வீடமைப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு (ஸ்ட்ராட்டா) பட்டா உரிமை சிக்கல்களைக் கையாள, ஈராண்டுகளில் 1 கோடி ரிங்கிட்டிலிருந்து 2 கோடி ரிங்கிட் வரையிலான நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
2025 முதல் 2026 வரையிலான காலப்பகுதிக்கான இந்த ஒதுக்கீடு, உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு மிகவும் பயனுள்ள தீர்வை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் ஒன்றாகும் என இம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
இங்குள்ள விந்தாம் அக்மார் (Wyndham Acmar) விடுதியில் நடைபெற்ற 'சிலாங்கூர் மாநில அடுக்குமாடி சமூக மேம்பாட்டுத் திட்ட ஒப்படைப்பு விழாவில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அதே வேளையில், சில குடியிருப்பாளர்கள் இன்னும் எதிர்கொண்டு வரும் இந்த அடுக்குமாடி பட்டா சிக்கல்களுக்கான தீர்வை விரைவுபடுத்துவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் மாநில அரசுக்குத் தேவைப்படுகிறது என்றும் அமிருதின் கூறினார்.
"மாநில அரசு உதவத் தயாராக உள்ளது, ஆனால் இந்த பட்டா விவகாரத்தை சிறந்த முறையில் தீர்ப்பதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் எங்களுக்கு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
சில வீடமைப்பு மேம்பாட்டாளர்களின் கவனக்குறைவு மற்றும் அவர்களின் பொறுப்புகளைச் செய்யத் தவறியது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த சிக்கல் முழுமையாகக் கையாளப்பட வேண்டும்.
முந்தைய நிர்வாகக் குறைபாடுகளே இத்தகைய சிக்கல்களுக்குக் காரணம் என்றும், இது குறிப்பிட்ட சில மேம்பாட்டாளர்கள் தங்களின் பொறுப்புகளைப் புறக்கணிப்பதற்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறினார்.
"சில மேம்பாட்டாளர்கள் அலட்சியமாகவும், சோம்பேறித்தனமாகவும், தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டும் தங்களின் பொறுப்புகளிலிருந்து தப்பி ஓடிவிடுகின்றனர்.
இறுதியில், இந்த அடுக்குமாடி பட்டா உரிமை ஒரு பெரிய சிக்கலாக மாறுகிறது," என்றார் அவர்.
மாநில அரசு, சம்பந்தப்பட்ட அமைப்புகள், மேம்பாட்டாளர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இந்த நடப்பு ஆட்சிக்காலத்தில் மிகவும் பயனுள்ள தீர்வுகளைத் தரும் என்று அமிருதின் நம்பிக்கை தெரிவித்தார்.
"இந்த ஆட்சிக்காலத்திற்குள், அடுக்குமாடி பட்டா உரிமை தொடர்பான விவகாரங்களுக்கு விரைவான தீர்வுகளையும் சிறந்த வழிமுறைகளையும் வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.




