வாவாசன் எரி நீர் மாசு: கழிவு நீர் வெளியேற்றமே காரணம்

17 செப்டெம்பர் 2026, 8:53 AM
வாவாசன்  எரி நீர் மாசு:  கழிவு நீர் வெளியேற்றமே காரணம்

ஷா ஆலாம், செப் 17 : சுபாங் ஜெயா, தாமான் வாவாசானில் உள்ள வாவாசான் ஏரியின் நீர் கருமையாக மாறியதற்கும், துர்நாற்றம் வீசியதற்கும் மற்றும் மீன்கள் இறந்து கிடந்ததற்கும், அடைபட்டுக் கிடந்த கழிவுநீர் குழாய்களிலிருந்து வெளியேறிய கழிவுநீரே முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் (MBSJ), இண்டா வாட்டர் கன்சோர்டியம் (IWK) நிறுவனத்துடன் இணைந்து நடத்திய சோதனையில், வாவாசான் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் உள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதனால், கழிவுநீர் சாக்கடையில் இருந்து வழிந்தோடி, அருகில் உள்ள வடிகால் அமைப்பில் கலந்துள்ளது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் சாக்கடையில் உள்ள குழாய் அமைப்பில் ஏற்பட்டுள்ள சேதமும் இந்த நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது," என்று அது கூறியது.

இதனைத் தொடர்ந்து, இண்டா வாட்டர் நிறுவனம் சம்பந்தப்பட்ட சாக்கடையைச் சுத்தம் செய்துள்ளது. தற்போது வடிகால் அமைப்பில் கழிவுநீர் கலப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய இண்டா வாட்டர் , அந்த சாக்கடையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது.

அதே வேளையில், சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் தனது சோதனையை தாமான் வாவாசான், RPKR 500 அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

அங்குள்ள சாக்கடைகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கழிவுநீர் குழாய் அமைப்புகள் வாவாசான் ஏரி மாசுபாட்டிற்கு பங்களித்திருக்கலாம் என சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

"RPKR 500 அடுக்குமாடி குடியிருப்பின் கூட்டு நிர்வாக வாரியம், குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் உள்ள சாக்கடைகள் மற்றும் குழாய் அமைப்புகளில் கண்டறியப்பட்ட பழுதுகளை உடனடியாக சரிசெய்ய சுபாங் ஜெயா மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது," என்று அது தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் மேற்நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை உறுதி செய்வதற்காக, நீர்ப்பாசன வடிகால் துறை (JPS) மற்றும் தேசிய நீர் சேவை ஆணையம் (SPAN) ஆகியவற்றுடன் இணைந்து சுபாங் ஜெயா மாநகர் மன்றம் செயல்பட்டு வருகிறது.

முன்னதாக, த்ரெட்ஸ் (Threads) சமூக வலைதளப் பக்கத்தில், வாவாசான் ஏரி நீர், கருப்பாக மாறி துர்நாற்றம் வீசுவதாகவும், இது குறித்து சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.