2 வாகனங்கள் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன்

17 செப்டெம்பர் 2026, 1:15 AM
2 வாகனங்கள் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய  14 வயது சிறுவன்

பட்டவொர்த், செப் 17 : பினாங்கில் 14 வயது சிறுவன் ஒருவன் காரை ஓட்டி 2 வாகனங்கள் மீது மோதி, விபத்தை ஏற்படுத்தினான்.

சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீது மோதிய அச்சிறுவன், பின்னர் போக்குவரத்துக்கு எதிராக காரைச் செலுத்தி மற்றொரு வாகனத்தின் மீது மோதினான்.

இச்சம்பவம் தொடர்பில் வைரலான காணொளியில், அச்சிறுவன் காரை ஓட்டிச் சென்று மற்றொரு வாகனத்தின் மீது மோதுவதும், பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவனைத் தடுத்து நிறுத்துவதும் பதிவாகியுள்ளது.

பிராய், தாமான் சாய் லெங் (Taman Chai Leng) பகுதியில் உள்ள இரு வெவ்வேறு இடங்களில், 14 வயது சிறுவன் ஒருவன் காரை ஓட்டிச் சென்று இரு வாகனங்கள் மீது மோதிய அந்த வைரல் காணொளியை போலீஸ் உறுதிப்படுத்தியது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 4.50 மணிக்கு நடந்துள்ளது.

இது குறித்து அன்றைய தினமே இரவு 8.47 மணிக்கு புகார் அளிக்கப்பட்டது என மத்திய செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் நிக் அமினுடின் ராஜா அப்துல்லா தெரிவித்தார்.

"முதற்கட்ட விசாரணையில், லோரோங் குராவ் 23-லிருந்து (Lorong Kurau 23) ஜாலான் குராவ் 1-ஐ (Jalan Kurau 1) நோக்கி காரை ஓட்டிச் சென்ற அந்தச் சிறுவன், முதலில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீது மோதியது தெரியவந்தது.

"அதன் பின்னரும் அவன் காரை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்று, லெபு குராவ் 5-ல் (Lebuh Kurau 5) உள்ள ஒரு வழிப் பாதையில் தவறான திசையில் நுழைந்து, சரியான பாதையில் வந்து கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியுள்ளான்," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று நிக் அமினுடின் கூறினார்.

ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதற்காக, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் பிரிவு 42(1)-ன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.