ஷா ஆலம், செப் 14 : 22 வயதான இளம் மலையேறி முஹம்மட் சஹ்ருல்நிஜாம் முகமட் நூர் மற்றும் அவரது குழுவினர் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முககாமை (Mount Everest base camp) சென்றடையும் நோக்கத்திற்கு ஆதரவாக, சிலாங்கூர் மாநில அரசு 38,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவியை வழங்கியுள்ளது.
சஹ்ருல்நிஜாம் மற்றும் அவரது குழுவினர் இந்த சவாலான பயணத்தை எதிர்கொள்வதற்கான ஆதரவு மற்றும் ஊக்கத்தின் அடையாளமாக இந்த உதவி வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
"இந்த நிதியுதவி 11 குழு உறுப்பினர்களில் நான்கு முதல் ஐந்து பேருக்கான செலவுகளை ஈடுகட்ட உதவும்.
இது அவர்களின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக மலையேற்றத்தின் போது ஏற்படும் அதிகப்படியான பெர்மிட் கட்டணங்கள் மற்றும் இதர செலவுகளுக்கு இது உதவும்," என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பயணக் குழுவின் தலைவர் டான் ஸ்ரீ ஜோஹான் ஜாஃபாரிடம் இந்த நிதியுதவியை வழங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த மலையேற்றப் பயணம், சஹ்ருல்நிஜாம் தனது 24 -வது வயதிற்குள், அதாவது 2028-ஆம் ஆண்டிற்குள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைப்பதற்கான ஒரு ஆரம்பகட்ட முயற்சியாகும்.
இந்த முயற்சி சிலாங்கூர் மக்கள் சவால்களை எதிர்கொள்ளவும், தங்களின் எல்லைகளைக் கடந்து சாதிக்கவும் தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புவதாக அமிருதின் தெரிவித்தார்.
இந்த 11 பேர் கொண்ட குழுவினர், புதன்கிழமை மலேசிய தினத்தன்று எவரெஸ்ட் அடிவார முகாமிற்கான தங்களின் மலையேற்றப் பயணத்தைத் தொடங்கவுள்ளனர்.




