ஷா ஆலம், செப் 14 : சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ்-ஜின் வெள்ளி விழா ஆட்சியாண்டை (Silver Jubilee) முன்னிட்டு ‘ஜூப்ளி பேராக் கிண்ண’ (Piala Jubli Perak) காற்பந்துப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிண்ணத்துடன் ரொக்கப் பரிசை வெல்வதற்காக 48 பள்ளி காற்பந்து அணிகள் மோதவிருக்கின்றன.
இவ்வாண்டு இப்போட்டி, ஆண்டுதோறும் நடைபெறும் ' ராஜா மூடா சிலாங்கூர் கிண்ண' (Piala Raja Muda Selangor) போட்டிக்கு மாற்றாக நடத்தப்படுகிறது என்று போட்டியின் முதன்மைக் குழுத் தலைவர் டத்தோ எம்ரான் காதிர் தெரிவித்தார்.
"உலகக் கிண்ண வடிவத்தைப் பின்பற்றி, இவ்வாண்டு பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 32-லிருந்து 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே இவ்வாண்டின் வித்தியாசமாகும்." என்று அவர் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள காராங்கிராஃப் மண்டபத்தில் (Dewan Karangkraf) நடைபெற்ற ஜூப்ளி பேராக் கிண்ண காற்பந்து போட்டியின் நிதியுதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டப் பின்னர் டத்தோ எம்ரான் காதிர் செய்தியாளர்களிடம் பேசினார்.

15 வயதுக்குட்பட்டோருக்கான இக்காற்பந்துப் போட்டி, முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்குகிறது.
"15 வயதுக்குட்பட்ட பள்ளி அளவிலான போட்டிகளில் ரொக்கப் பரிசுகளை வழங்கும் ஒரே காற்பந்துப் போட்டி இதுவாகும்.
இதில் வெற்றிப் பெறும் அணிக்கு 12,000 ரிங்கிட்டும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 9,000 ரிங்கிட்டும், மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 7,000 ரிங்கிட்டும், நான்காம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 5,000 ரிங்கிட்டும் வழங்கப்படும்.
சுல்தானால் வழங்கப்பட்ட இந்த ' ஜூப்ளி பேராக்' கிண்ணம், இறுதிப் போட்டிக்குப் பிறகு வெற்றி பெற்ற பள்ளியால் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்கப்படும்.
அதன்பின்னர், அக்கிண்ணம் திரும்பப் பெறப்பட்டு, இஸ்தானா ஆலாம் ஷாவில் உள்ள சிலாங்கூர் காற்பந்து அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக வைக்கப்படும் என்றும், வெற்றிப் பெற்ற பள்ளிக்கு அதன் மாதிரி கிண்ணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முதல் போட்டி செப்டம்பர் 22 -ஆம் தேதி நடைபெறவுள்ள அதே வேளையில், இறுதிப் போட்டி அக்டோபர் 31 -ஆம் தேதி எம்பிபிஜே (MBPJ) பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக அரங்கில் நடைபெற உள்ளது.
இதில் சுல்தான் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜூப்ளி பேராக் கிண்ணப் போட்டியை ஏற்பாடு செய்யவும், அடிமட்ட அளவிலான காற்பந்து விளையாட்டை மேம்படுத்தவும், புதிய திறமையாளர்களை அடையாளம் காணவும் மாநில அரசு 5 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது என மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ அகமத் ஃபத்லி அகமத் தாஜுதீன் தெரிவித்தார்.

இப்போட்டியின் மூலம் கண்டறியப்படும் புதிய திறமையாளர்கள், சுக்மா போட்டிக்குத் தயார்படுத்துவது உட்பட காற்பந்து மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.





