ஷா ஆலாம், செப் 14 : பெட்டாலிங் ஜெயா , பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து 15 பதின்ம வயது இளைஞன் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டான்.
எனினும், அந்த இளைஞன் பேராக், உலு கிந்தா மனநல மருத்துவமனையில் இன்று தொடங்கி, சிலாங்கூர் சுல்தான் அனுமதிக்கும் காலம் வரை சேர்க்கும்படி நீதிபதி அட்லின் அப்துல் மஜிட் உத்தரவிட்டார்.
சம்பம் நிகழ்ந்தபோது, அந்த இளைஞன் புத்திசுவாதீனம் இல்லாத நிலையில் இருந்ததாக, அந்த இளைஞனை பிரதிநிதித்த வழக்கறிஞர் கிட்சோன் ஃபூங், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மனநலம் சரியில்லை என்ற காரணத்தால் அவ்விளைஞனை விடுவிக்க முடிவெடுக்கப்பட்டது.
மேலும், அந்த இளைஞன் ஸ்கிட்ஸோஃப்ரினியா (Schizophrenia), அதாவது தீவிர மனநலப் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக, உலு கிந்தா தடயவியல் மனநல நிபுணர் வழங்கிய வாக்குமூலத்தையும் , நீதிமன்றம் கருத்தில் கொண்டதாக ஃபூங் தெரிவித்தார்.
'ஸ்கிட்ஸோஃப்ரினியா' பாதிப்பு , அந்த இளைஞனை அவனாக இல்லாமல் மாற்றிவிடுகிறது. அவன் தன்னை ஒரு கடவுளாக நினைத்துக் கொள்வான். யாரிடமிருந்தோ தனக்கு குரலும் உத்தரவும் கேட்பதாக அந்த இளைஞன் கூறியுள்ளான்" என பூக் குறிப்பிட்டார்.
அந்தப் பாதிப்புக்காக அவ்விளைஞன் சிகிச்சையைப் பெறும் நிலையில், குணமடைய காலமாகுமென்றாரவர்.
இவ்வேளையில், தனது செயல் ஓர் உயிர் இழப்புக்கு காரணமாகியிருப்பதை உணர்வதோடு, தனக்கு வழங்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பிற்கு மதிப்பளிக்குமாறும், அவ்விளைஞனை நீதிபதி நினைவூட்டினார்.
முன்னதாக அந்த இளைஞன், கடந்தாண்டு அக்டோபட் 14-ஆம் தேதி, காலை மணி 9.20-க்கும் 9.35-கும் இடைப்பட்ட நேரத்தில் பண்டார் உத்தாமாவில் உள்ள இடைநிலைப் பள்ளியில், பெண்கள் கழிவறையில் சக பள்ளி மாணவியைக் கொலை செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான்.
மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறை மற்றும் அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறை மற்றும் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் 12-க்கும் மேற்போகாத பிரம்படிகள் தண்டனையாக வழங்கும் குற்றவியல் சட்டம் செக்க்ஷன் 302 -இன் கீழ், அந்த இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், 2001 சிறார் சட்டத்தின் செக் ஷன் 97 ( 1) பிரிவின் கீழ், 18 வயதுக்கு கீழ்பட்ட சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, பேரரசர் , சுல்தான் அல்லது யாங் டிபெர்துவா அனுமதிக்கும் காலம் வரை தடுத்து வைக்க அதே சட்டத்தின் செக்ஷன் 97( 2) பிரிவின் கீழ் அனுமதிக்கப்படுகிறது.



