கேமரன் மலை, செப் 12 : தானா ரத்தா, ஜாலான் சுல்தான் ஹாஜி அகமட் ஷாவின் பிரிவு 1.4-இல் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, நேற்று மதியம் அனைத்து வாகனங்களுக்கும் அந்தச் சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
மாலை 4.50 மணிக்கு அந்தச் சம்பவம் குறித்து தெரிய வர , பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுப் பணித்துறையும் ஒய்பி மெயின்டனன்ஸ் (YP Maintenance) நிறுவனமும் இணைந்து மண் அகற்றும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் , சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
அதிகாரிகள் துப்புரவுப் பணிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். சாலை பாதுகாப்பானது என்று கருதப்பட்டவுடன் மீண்டும் அது திறக்கப்படுமென மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரண்டென்ட் அஸ்ரி ராம்லி தெரிவித்தார்.
"சம்பவ இடத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது, மேலும் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தற்காலிகமாக இந்தச் சாலையைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அவர் ஓர்அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாலை 4.53 மணிக்கு பிரிஞ்சாங், தாமான் பெருமஹான் கோல்டன் ஹில்லில் (Taman Perumahan Golden Hill) திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் மூன்று வீடுகளும் ஏழு வாகனங்களும் பாதிக்கப்பட்டன.இச்சம்பவத்தில் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்பதை அஸ்ரி உறுதிப்படுத்தினார்.
"மேலதிக நடவடிக்கை மற்றும் கண்காணிப்பிற்காகக் காவல்துறைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.அவர்கள் அங்கு சென்றடைந்தபோது, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்ததும், வெள்ள நீர் வடியத் தொடங்கியிருந்ததும் தெரியவந்தது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காகத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஆகியவற்றுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
மாறுபட்ட வானிலை சூழ்நிலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள், குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், விழிப்புடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியுமாறும் போலிஸ் அறிவுறுத்தியுள்ளது.



