கோலாலம்பூர், செப் 11 : ஏர் ஏசியா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார், புதிதாக நிறுவப்பட்ட ஏ.ஐ மலேசியா நிறுவனத்தின் (AI Malaysia Bhd) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் தேசிய செயற்கை நுண்ணறிவு ( AI ) திட்டங்களை வழிநடத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும், கடந்த ஜூலை 28-ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஏ.ஐ மலேசியா நிறுவனம் அமைக்கப்படுவதை அறிவித்தார்.
அவரது அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த நிறுவனத் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் ஐரின் ஓமாரின் நியமனம் அமைந்துள்ளது.
" ஐரீன் தற்போது டியூன் புரோடெக்ட் குழுமத்தின் வாரிய உறுப்பினராகவும், மலேசியா சபா பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியராகவும் இருக்கிறார்.
வணிக உருமாற்றம், தொழில்நுட்பம் மற்றும் வட்டார வளர்ச்சி ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டு ஐரீன், ஏ.ஐ மலேசியா நிறுவனத்தை வழிநடத்தப் போகிறார்" என இலக்கவியல் அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
ஏஐ மலேசியா நிறுவனம் இலக்கவியல் அமைச்சின் கீழ் செயல்படுகிறது.
பொது, தனியார் துறைகளைச் சேர்ந்த சிறந்த தலைவர்களை உள்ளடக்கிய அந்த நிறுவனத்தின் முதலாவது வாரியத்தில், ஐரின் ஒமாருடன் இணைந்து இலக்கவியல் அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஃபேபியன் பிகார், அதன் துணைத் தலைமைச் செயலாளர் மா. சிவநேசன் மாரிமுத்து, மலேசிய ஊழியர் சேமநிதி வாரியத்தின் தலைமை இலக்கவியல்தொழில்நுட்ப அதிகாரி முகமட் அஃப்ஸால் அஃப்சால் ரஹ்மான் மற்றும் டிரெண்ட்செல் நிறுவனத் தலைவர் ஃபூ யென் லிங் அடிலின் ஆகியோரும் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.




