ஷா ஆலம், செப் 11 : சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுதீன் இத்ரிஸ் ஷா அல்-ஹாஜ்-ஜின் 25 ஆண்டுகால ஆட்சியை முன்னிட்டு, வெள்ளி விழா கொண்டாட்டங்கள் செப்டம்பர் 28 முதல் நவம்பர் 1 வரை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்காக 20 அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என , சிலாங்கூர் மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ டாக்டர் அகமட் ஃபாத்லி அகமட் தாஜுதீன் தெரிவித்தார்.
சுல்தானின் உத்தரவுக்கு இணங்க, ஒட்டுமொத்த கொண்டாட்டங்களும் ஆடம்பரமின்றி, எளிமையாகவும் சிக்கனமாகவும் நடத்தப்படும் என்றும், இதற்கான அதிகபட்ச செலவு வரம்பு 1 கோடியே 20 லட்சம் ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இன்று மாநில அரசு நிர்வாகக் கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டம் குறித்த விபரங்களை அவர் வெளியிட்டார்.

சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சியின் முக்கிய நாளான அக்டோபர் 25 -ஆம் தேதி மூன்று முக்கிய சடங்குகள் நடைபெறவுள்ளன.
அதில் முதலாவதாக 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க நடைபெறும் முதன்மை அணிவகுப்பு மரியாதை சடங்கு இடம்பெறும்.
இரண்டாவதாக, அரண்மனைப் பிரமுகர்கள் மற்றும் சிலாங்கூர் அரச குடும்ப டத்தோ - களுக்கான பட்டயப் பிரகடனம் மற்றும் பதவியேற்பு சடங்கும்,
மூன்றாவதாக சிலாங்கூர் மாநிலத்தின் உயரிய விருதுகள் வழங்கும் விழாவும் நடைபெறும்.
இதனிடையே, பொதுமக்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினைக் கொண்டாடும் வகையில், சிலாங்கூர் மாநில அரசு அக்டோபர் 25-ஆம் தேதியை சிலாங்கூர் மாநிலம் முழுவதும் சிறப்பு விடுமுறையாகப் அறிவித்துள்ளது.
அந்தத் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 26-ஆம் தேதி திங்கட்கிழமை மாற்றுப் பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு சமூக- நலத்திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் , 3,000 பொதுமக்கள் கலந்துகொள்ளும் அரச தேநீர் விருந்து நிகழ்ச்சி,
மேலும் கெம்பாரா செமனாஞ்சுங் மூலம் ஆதவற்ற இல்லக் குழந்தைகளைச் சந்தித்தல், ஆட்டிசம் நட்பு பூங்கா திறப்பு விழா மற்றும் லாரியான் கித்தா ஓட்டப்பந்தயம் போன்ற சமூகத் திட்டங்களும் நடத்தப்படும்.
வரலாற்று ஆவணப் பதிவுகளுக்காகச் சிறப்பு அஞ்சல் தலைகள் மற்றும் கடித உறை வெளியீடு, நினைவு நாணயங்கள் மற்றும் மெஞ்சுலாங் தஹ்தா (Menjulang Takhta) புத்தக வெளியீட்டு விழா ஆகியவையும் நடைபெறும்.
விளையாட்டுத் துறையில், சிலாங்கூர் போலோ மற்றும் குதிரையேற்றக் கழகத் திறப்பு விழா, சுல்தான் சிலாங்கூர் வெள்ளி விழா போலோ கிண்ணப் போட்டி மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து லீக் போட்டிகள் ஆகியவை நடத்தப்படும்.
அரண்மனை சடங்குகள் மற்றும் மாநில விருதுகள் வழங்கும் விழாவுடன் இந்த வெள்ளி விழா கொண்டாட்டங்கள் அனைத்தும் நவம்பர் 1-ஆம் தேதி நிறைவுபெறும் .



