வட்டார விண்வெளி மையம்: சுற்றுச்சூழல் அமைப்பை சிலாங்கூர் முழுமைப்படுத்த வேண்டும்

11 செப்டெம்பர் 2026, 6:05 AM
வட்டார விண்வெளி மையம்: சுற்றுச்சூழல் அமைப்பை  சிலாங்கூர்  முழுமைப்படுத்த வேண்டும்
வட்டார விண்வெளி மையம்: சுற்றுச்சூழல் அமைப்பை  சிலாங்கூர்  முழுமைப்படுத்த வேண்டும்
வட்டார விண்வெளி மையம்: சுற்றுச்சூழல் அமைப்பை  சிலாங்கூர்  முழுமைப்படுத்த வேண்டும்

ஷா ஆலம், செப் 11 : சிலாங்கூர் மாநிலம் , வட்டாரத்துவ விண்வெளி மையமாக (Regional Aerospace Hub) உருவெடுக்க, அதன் விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை (Aerospace Ecosystem) முழுமைப்படுத்த வேண்டும்.

அதற்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, தரமான முதலீட்டு ஈர்ப்பு மற்றும் உள்ளூர்-வெளிநாட்டு விநியோகச் சங்கிலி (Supply Chain) கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

மலேசியாவின் விண்வெளித் துறை நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு சிலாங்கூர் மாநிலத்தில், குறிப்பாக சுபாங் மற்றும் செப்பாங் ஆகியப் பகுதிகளில் குவிந்துள்ளதால், இத்துறைக்கு இந்த மாநிலம் ஏற்கனவே ஒரு பெரிய நன்மையைக் கொண்டுள்ளது என தேசிய விண்வெளித் தொழில் கழகத்தின் (NAICO) தலைமை நிர்வாக அதிகாரி ஷம்சுல் கமார் அபு சமாஹ் தெரிவித்தார்.

தேசிய விண்வெளித் தொழில் கழகத்தின் (NAICO) தலைமை நிர்வாக அதிகாரி ஷம்சுல் கமார் அபு சமாஹ்

இருப்பினும், உற்பத்தி,பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் (MRO), பொறியியல் மற்றும் மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிக மதிப்புள்ள செயல்பாடுகளை ஈர்ப்பதன் மூலம் இந்த நன்மை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அண்மையில் 'மீடியா சிலாங்கூர்' ஊடகம் தொடர்பு கொண்டபோது அவர் அதனைத் தெரிவித்தார்.

சுபாங் விமான நிலைய மறுசீரமைப்புத் திட்டம் (SARP), சிலாங்கூர் ஏரோ பார்க் (SAP) மற்றும் கேஎல்ஐஏ ஏரோபோலிஸ் (KLIA Aeropolis) ஆகியவற்றின் மேம்பாடு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் மாநிலத்தின் விண்வெளித் துறையை விரிவாக்குவதற்கும் உந்துசக்தியாக இருக்குமென ஷம்சுல் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருதின் ஷாரி தாக்கல் செய்த, இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) கீழ், விண்வெளித் துறையின் இலக்குகளுடன் இந்த மேம்பாடுகள் ஒத்துப்போகின்றன.

RS-2 திட்டத்தின் கீழ், மாநிலத்தின் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய 25 துறைகளில் ஒன்றாக விண்வெளித் துறை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், SAP@KLIA Aeropolis மற்றும் SARP ஆகியவை முதன்மைத் திட்டங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதனிடையே விண்வெளித் தொழில்துறை வளர்ச்சியை ஆதரிக்க சிலாங்கூருக்கு முழுமையான விநியோகச் சங்கிலி தேவை என்றும் ஷம்சுல் கூறினார்.

சிலாங்கூரில் ஏற்கனவே அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (OEM) உள்ளிட்ட 'டயர் 1' (Tier 1) நிறுவனங்கள் உள்ளன.

ஆனால் அடுத்த கட்ட விநியோகச் சங்கிலியை நிறைவு செய்ய இன்னும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SME) தேவைப்படுகின்றன.

மேலும் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த விண்வெளி உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க Tier 2, Tier 3 மற்றும் Tier 4 விநியோகஸ்தர்கள் இருப்பதும் முக்கியம்.

Tier 1 விநியோகஸ்தர்கள் வழக்கமாக முக்கிய அமைப்புகள் அல்லது தளவாடங்களை நேரடியாக விமான உற்பத்தியாளர்களுக்கு வழங்குகிறார்கள்.

அதே நேரத்தில் Tier 2 முதல் Tier 4 வரையிலான விநியோகஸ்தர்கள் விநியோகச் சங்கிலியின் அடுத்தடுத்த கட்டங்களில் தளவாடங்கள், பொருட்கள் மற்றும் ஆதரவு சேவைகளை வழங்குகிறார்கள்.

இந்த வாய்ப்பு உள்ளூர் நிறுவனங்களை மட்டுமே உட்படுத்தியிருக்கக் கூடாது.

சிறப்பு நிபுணத்துவம் கொண்ட வெளிநாட்டு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களும் சிலாங்கூரில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கலாம் என்றும் ஷம்சுல் குறிப்பிட்டார்.

இவ்வேளையில் தயாரிப்புத் துறையில், சிலாங்கூர் மாநிலம் யுஎம்டபிள்யூ ஏரோஸ்பேஸ் (UMW Aerospace) மற்றும் சிடிஆர்எம் ஏரோசிஸ்டம்ஸ் (CTRM AeroSystems) போன்ற முக்கிய நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்துலகச் சந்தையில் ஊடுருவக்கூடிய பல உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர தொழில்களையும் (SME) உருவாக்க வேண்டும்.

"நாம் இந்த இரு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. இதர முதலீட்டாளர்களுடன் இணைந்து உள்ளூர் சிறு நடுத்தர தொழிற்துறை நிறுவனங்களை உருவாக்க முடிந்தால், அவர்களாலும் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்க முடியும்," என்று ஷம்சுல் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.