ஷா ஆலம், செப் 10 : சிலாங்கூர் மாநிலம் மொத்தம் 200 பதக்கங்களை வென்று 2026-ஆம் ஆண்டிற்கான பாரா சுக்மா (Para SUKMA) போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளராக உருவெடுத்து சாதனை படைத்தது.
கடந்த மாதம் நடைபெற்ற சுக்மா போட்டியிலும் சிலாங்கூர் ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடிய நிலையில், இந்த வெற்றியின் மூலம் இம்மாநிலம் தனது இரட்டை வெற்றியாளர் சாதனையை முழுமைப்படுத்தியுள்ளது.
போட்டியை ஏற்று நடத்திய சிலாங்கூர் மாநிலத்தின் பாரா சுக்மா அணி, 93 தங்கம், 55 வெள்ளி மற்றும் 52 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று ஒட்டுமொத்த வெற்றியாளராக உருவெடுத்தது.
சபா மாநிலம் 69 தங்கம், 51 வெள்ளி மற்றும் 45 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
சரவாக் மாநிலம் 52 தங்கம், 32 வெள்ளி மற்றும் 54 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
மேலும் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால், தொடக்கத்தில் இலக்கு வைக்கப்பட்ட 60 தங்கப் பதக்கங்களை விட சிலாங்கூர் பாரா அணி மொத்தம் 93 தங்கப் பதக்கங்கள் அதிகமாக வென்றது.
இது போட்டி முழுவதும் உள்ளூர் விளையாட்டு வீரர்களின் நிலையான மற்றும் சிறந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மையத்தில் (SITC) நடைபெற்ற பாரா சுக்மா நிறைவு விழாவில், மாநில பாரா நீச்சல் வீரர் முகமட் சஃப்வான் சுஹைமி (வயது 20), "சிலாங்கூர் பாரா சுக்மா 2026-இன் சிறந்த ஆடவர் பாரா விளையாட்டு வீரராக" அறிவிக்கப்பட்டார்.
சஃப்வான் 6 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றதோடு, S9 பிரிவின் 100 மீட்டர் பட்டாம்பூச்சி நீச்சல் (butterfly) பிரிவிலும் SM9/SM10 பிரிவின் 200 மீட்டர் தனிநபர் கலவை நீச்சல் பிரிவிலும் (individual medley) இரு புதிய தேசிய சாதனைகளை முறியடித்தார்.

பாரா சுக்மா 2026-இன் சிறந்த மகளிர் பாரா விளையாட்டு வீராங்கனை விருது, சரவாக் மாநில வீராங்கனை நோஷாஸ்வானி மைசரா மர்சுகிக்கு (வயது 22) கிடைத்தது.
அவர் இரு போட்டி சாதனைகளைத் தகர்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

நோஷாஸ்வானி F37 பிரிவின் ஈட்டி எறிதல் மற்றும் F37 பிரிவின் குண்டு எறிதல் போட்டிகளில் புதிய சாதனைகளைப் பதிவு செய்ததுடன், இரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா RM5,000 ரொக்கத்தையும் , சுழற்கோப்பையையும் மாநில டத்தோ மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருதின் ஷாரி வழங்கினார்.




