கலிஃபோர்னியா, செப் 10 - ஆப்பிள் (Apple) நிறுவனம், $1,999 (சுமார் RM8,100) விலையில் ‘டுவோ’ (Duo) என்ற மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரவு தனியுரிமை போன்ற சிறப்பு அம்சங்கள், சந்தையில் பல ஆண்டுகளாக மடிக்கக்கூடிய கைப்பேசிகளை விற்று வரும் போட்டி நிறுவனங்களை வெகுவாக முந்தச் செய்யும் என்று ஆப்பிள் நம்புகிறது.
பல காலமாக சாம்சுங் (Samsung) மற்றும் ஹுவாவே (Huawei) போன்ற சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்த மடிக்கக்கூடிய கைப்பேசி சந்தையை, 'டுவோ' முற்றிலும் மாற்றியமைக்கக்கூடும்.
இதுவரை இவ்வகை கைப்பேசிகள் ஒரு குறிப்பிட்ட வட்டார வாடிக்கையாளர்களைத் தாண்டி பொதுமக்களைச் சென்றடைய சிரமப்பட்டு வந்தன.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வரவு, மடிக்கக்கூடிய கைப்பேசிகளை உலகளவில் பிரதானமான ஒன்றாக மாற்றும் ஒரு ஊக்கியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.
இதற்கு முன்னர் 'ஸ்மார்ட்வாட்ச்' (விவேக கைப்பேசி ) மற்றும்'வயர்லெஸ் இயர்பட்ஸ்' (கம்பியில்லா காதொலிக் கருவிகள் ) சந்தைகளிலும், ஆப்பிள் இதேபோன்ற புரட்சியைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
‘டுவோ’ ஒரு பயணக் கடப்பிதழ் (passport) அளவு மற்றும் வடிவத்தில், வளைந்த விளிம்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதைத் திறக்கும்போது, 7.6 அங்குல (19 செ.மீ) கிடைமட்டத் திரை (horizontal screen) வெளிப்படுகிறது. இதனை செங்குத்தாகவும் (vertical) பயன்படுத்தலாம்.
கைப்பேசி மடிக்கப்பட்டிருக்கும் போது அதன் முன்புறத்தில் ஒரு சிறிய ஒற்றைத் திரை இருக்கும்.
கைப்பேசி திறந்திருக்கும் போது, இதுவே ஆப்பிளின் மிக மெலிதான (thinnest) கைப்பேசி என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சீன போட்டி நிறுவனங்கள் வழங்கும் மடிக்கக்கூடிய கைப்பேசிகளை விட இது சற்றே தடிமனாக உள்ளது.
2017-இல் அறிமுகமான ஐபோன் எக்ஸ் (iPhone X)-க்கு பிறகு ஆப்பிளின் முதன்மை தயாரிப்பில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான மறுசீரமைப்பு இதுவாகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு விற்பனையில், ஐபோன் மூலம் மட்டும் $209.6 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளது.
இது நிறுவனத்தின் மொத்த விற்பனையில் பாதியாகும்.




