ஷா ஆலாம், செப் 9 - 2026 செப்டம்பர் 10 முதல் 16 -ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கு உதவித் தொகை இல்லாத RON97, RON95 பெட்ரோல் மற்றும் உதவித் தொகை இல்லாத டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை முறையே ஒரு லிட்டருக்கு 25 சென் உயர்ந்துள்ளது.
RON97 பெட்ரோல் விலை இதற்கு முன்பு இருந்த 4 ரிங்கிட் 25 சென்னிலிருந்து 4 ரிங்கிட் 50 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
RON95 பெட்ரோல் விலை 3 ரிங்கிட் 77 சென்னிலிருந்து 4 ரிங்கிட் 2 சென்னாகவும் ,
உதவித் தொகை இல்லாத டீசல் விலை 4 ரிங்கிட் 67 சென்னிலிருந்து 4 ரிங்கிட் 92 சென்னாகவும் உயர்ந்துள்ளது என நிதி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்தும், ஹார்முஸ் நீரிணை வழியாக பெட்ரோலிய விநியோகம் தடைபடும் அபாயம் அதிகரித்துள்ளதாலும், சந்தை விலை நிர்ணய கணக்கீட்டு முறையின் கீழ் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சு விளக்கியுள்ளது.
பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து, கடந்த திங்கட்கிழமையன்று ஒரு பீப்பாய்க்கு 97.31 அமெரிக்க டாலரை எட்டியது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடரும் பதில் தாக்குதல்களால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கான " பாதுகாப்பற்ற சூழலுக்கான கட்டணம்' அதிகரித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் சுத்திகரிப்பு திறன் பாதிப்பு மற்றும் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தொடர் தாக்குதல்கள் காரணமாக, அனைத்துலகச் சந்தைக்கான பெட்ரோல், டீசல் மற்றும் பிற பெட்ரோலியப் பொருட்களின் விநியோகமும் குறைந்துள்ளது," என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"மேற்கு ஆசிய மோதல் தொடங்கி 193 நாட்களுக்குப் பிறகும், ஹார்முஸ் நீரிணை வழியாக பெட்ரோலிய விநியோகமும் உலகளாவிய சுத்திகரிப்பு திறனும் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
இந்த நிலை நீடித்தால், குறைந்து வரும் இருப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக உலகளாவிய பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீதான' பாதுகாப்பற்ற சூழலுக்கான கட்டணம் மேலும் அதிகரிக்கக்கூடும்," என நிதி அமைச்சு தெரிவித்தது .



