ஷா ஆலாம், செப் 9 - ஷா ஆலாம் எல்.ஆர்.டி3 (LRT3) திட்டத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டில், பாதுகாப்பான மற்றும் வசதியான நடைபாதைகளும், micromobility எனும் குறுகிய தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் இ-ஸ்கூட்டர், மிதிவண்டி போன்ற இலகுரக வாகனங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான வசதிகள் ஆகியவை முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளன.
பொதுப் போக்குவரத்து என்பது வெறும் ரயில் பயணத்தோடு முடிந்து விடுவதில்லை என்றும், பயணிகள் நிலையத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர்களின் இறுதிச் சேருமிடத்தை எளிதாக அடையும் வகையில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற நடைபாதைகள் மிக முக்கியம் என சிலாங்கூர் மாநிலத்தின் போக்குவரத்து துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
ஷா ஆலாம் மாநகராட்சி (MBSA), மாநிலப் பொருளாதார திட்டமிடல் பிரிவு (UPEN) மற்றும் பிளான்மலேசியா (PLANMalaysia) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து ஷா ஆலாம் நகர மையத்தில் மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு அவர் இதனை தமது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, டத்தோ மெந்திரி (Dato’ Menteri) எல்.ஆர்.டி 3 ரயில் நிலையத்திலிருந்து அனேகா வாக் பிகேஎன்எஸ் (Aneka Walk PKNS), எஸ்.எ.சி.சி பேரங்காடி (SACC Mall), ஷா ஆலாம் நகர மையம் மற்றும் மாநில அரசு செயலகம் ஆகிய (SUK) ஆகிய 3 இடங்களை இணைக்கும் மூன்று கிலோமீட்டருக்கும் தூரமான கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்படவிருப்பதாக அவர் கூறினார்.
மேலும், பயணிகளின் தொடக்க மற்றும் இறுதிப் பயணக் கட்டங்களை நிறைவு செய்யும் வகையில் இ-ஸ்கூட்டர் (e-scooter) மற்றும் சைக்கிள் நிறுத்துமிடங்கள் போன்ற நவீன நுண்ணிய இயக்க வசதிகளும் இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் இணைக்கப்படவுள்ளன.
சிலாங்கூர் மாநிலத்தைப் பாதசாரிகளுக்கு உகந்த மற்றும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு, வரும் நாட்களில் இது போன்ற பல கள ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






