கோலா லங்காட் ,செப் 8 - சிலாங்கூர் மாநிலத்தின் முதலீட்டு மதிப்பு இவ்வாண்டு 80 பில்லியன் ரிங்கிட் இலக்கைத் தாண்டி, 100 பில்லியன் ரிங்கிட் வரை எட்டக்கூடும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
மாநிலத்தின் முதலீட்டுச் செயல்பாடு தற்போது சாதகமான வளர்ச்சியை வெளிப்படுத்தி வருவதாகவும், வருடத்தின் பாதியிலேயே முதலீடுகள் சுமார் 70 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
"2025-ஆம் ஆண்டின் சாதனையின் அடிப்படையில் நாங்கள் 80 பில்லியன் ரிங்கிட் இலக்கை நிர்ணயித்தோம், ஆனால் 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாங்கள் ஏற்கனவே 70 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளோம்.
இது மலேசியாவிலேயே மிக உயர்ந்ததாகும்.
"நாங்கள் 80 பில்லியன் ரிங்கிட் இலக்கைத் தாண்டுவோம் என்று உறுதியாக நம்புகிறோம்.
உண்மையில், இந்த சாதகமான போக்கு நீடித்தால், 2024இல் நாங்கள் சாதித்தது போல 100 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ஒரு புதிய சாதனையை எங்களால் படைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாநிலத்தின் முதலீட்டுச் செயல்பாடு, விநியோகச் சங்கிலி தொடர்பான சவால்கள், பேரிடர் அபாயங்கள் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்ட தற்போதைய சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது என்றும் அமிருதின் குறிப்பிட்டார்.
எனவே, உள்ளூர் நிறுவனங்களுக்குப் புதிய சந்தைகளை உருவாக்கும் அதே வேளையில், கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாநில அரசு வெளிநாட்டு வர்த்தக , முதலீட்டுப் பயணங்களை தீவிரப்படுத்தும் என்று அவர் கூறினார்.
"உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. சூழ்நிலை மேம்படும் என்றும், நாம் நமது வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களைத் தொடர முடியும் என்றும் நம்புகிறோம்.
ஏனெனில் இந்த முதலீடுகளில் பெரும் பகுதி அவர்கள் இங்கு வருவது மட்டுமல்லாமல், நாம் அங்கு செல்வதையும் உள்ளடக்கியது.
"கேரித் தீவில் உள்ள மூன்றாவது துறைமுகம், கிள்ளான் புக்கிட் ராஜா மற்றும் பல பகுதிகளில் உள்ள தொழில்துறைப் பகுதிகள் போன்ற புதிய மேம்பாடுகள் சிலாங்கூரின் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் தூண்டும் என்று தாம் நம்புவதாகவும் அமிருடின் கூறினார்.
கிழக்குக் கடற்கரை இரயில் இணைப்பு (ECRL) உட்பட போக்குவரத்து இணைப்பின் விரிவாக்கமும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் முதலீட்டு வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக இருக்கும் என்றும் அமிருடின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
"திட்டமிட்டபடி இவ்வாண்டின் இறுதியில் ECRL இயங்கத் தொடங்கினால், அது சிலாங்கூரின் வடக்குப் பகுதிகளில் வளர்ச்சியைத் தூண்டும் என்று அவர் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம், இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் (Invest Selangor Bhd) இந்த ஆண்டுக்கான முதலீட்டு இலக்கை 80 பில்லியன் ரிங்கிட்டாக அறிவித்தது.
இது 2025 இல் நிர்ணயிக்கப்பட்ட 65 பில்லியன் ரிங்கிட் இலக்கை விட அதிகமாகும்.



