இணைய மோசடிக்காரர்களுக்குப் பிரம்படி : அசலினா ஆதரவு

8 செப்டெம்பர் 2026, 8:56 AM
இணைய மோசடிக்காரர்களுக்குப் பிரம்படி : அசலினா ஆதரவு

ஷா ஆலாம், செப் 8 : இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்குப் பிரம்படி உட்பட கடுமையான தண்டனைகளை வழங்கும், அரச மலேசிய போலீஸ் படையின் பரிந்துரையை, பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் கழக சீர்திருத்தம்) டத்தோ ஸ்ரீ அசலினா ஒத்மான் சைட் வரவேற்றுள்ளார்.

இருப்பினும், இணைய மோசடிகளைத் தடுக்கும் முயற்சிகள் கடுமையான தண்டனைகளில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது என்றும், நிதி நிறுவனங்களும் (வங்கிகள்) இதில் தங்களின் பங்களிப்பை வழங்கி கூடுதல் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"பிரம்படி தண்டனையை அறிமுகப்படுத்துவது குறித்த அரச மலேசிய போலீஸ் படையின் பரிந்துரையை நான் பார்த்தேன். மோசடி தொடர்பான குற்றங்களுக்குப் பிரம்படியையும் தாண்டிய கடுமையான தண்டனைகளை வழங்குவதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

அதே நேரத்தில், மோசடிப் பணம் போய்ச் சேரும் வங்கிகளும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற உத்தியை நான் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலமுறை கூறியுள்ளேன்," என்று இன்று இங்குள்ள ஆசிய அனைத்துலக நடுவர் மையத்தில் (AIAC) 2026 அரசியல் நிதி மாநாட்டைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றவர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டதைக் காரணம் காட்டி, மோசடிகளால் ஏற்படும் இழப்புகளின் முழுச் சுமையையும் வங்கிகள் வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவது நியாயமற்றது என்று அசலினா கூறினார்.

"யாராவது ஒரு பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தும்போது, ​​வங்கி வெறுமனே 'இது உங்கள் சொந்த ஆபத்து' என்று கூறிவிட முடியாது.

அப்படிப் பார்த்தால், மக்கள் தங்கள் பணத்தைப் பாய்க்கு அடியில் (மெத்தையின் கீழ்) வைப்பதே மேல்.

பெங்க் நெகாரா -மலேசிய மத்திய வங்கி பல பொதுச் சேவை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது; மேலும் போலிசும் பொதுமக்களுக்குப் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது, இருந்தபோதிலும் மக்கள் தொடர்ந்து மோசடிகளுக்கு இரையாகி வருகின்றனர்," என்றார்.

கடுமையான தண்டனைகள் மோசடி வழக்குகளை உண்மையிலேயே குறைக்குமா அல்லது வங்கிகள் மீது கூட்டுப் பொறுப்பைச் சுமத்தும் ஒரு வழிமுறை இக்குற்றத்தைக் கையாள்வதில் அதிகச் செயல்திறன் கொண்டதாக இருக்குமா என்பதை அரசாங்கம் மதிப்பிட வேண்டும் என்று அசலினா கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.