ஈப்போ, செப்.9 - பேராக், பிடோரில் உள்ள மலேசிய வன ஆராய்ச்சி கழகத்தின்(FRIM) சுமார் 2.42 ஹெக்டேர் வனப்பகுதி நேற்று மாலை தீப்பற்றிக் கொண்டது.
அத்தீ சம்பவம் குறித்து நேற்று மாலை 5.42 மணிக்கு அழைப்பு வந்ததை அடுத்து, பிடோர் தீயணைப்பு -மீட்பு நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பேராக் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கை துணை இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் தெரிவித்தார்.
அருகிலுள்ள குளத்திலிருந்து தண்ணீரைப் பெற்று, இரு ஜெட்டுகள் கொண்ட 700 அடி நீள ஜெட் ஸ்ட்ரீம் மற்றும் ஒரு போக்குவரத்து பம்ப் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
"நேற்று இரவும் மாற்று தீயணைப்பு வீரர்களைக் கொண்டு இந்த நடவடிக்கை தொடர்ந்தது.
தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், 15 சதவீத பகுதி மட்டுமே தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்கள் மற்றும் தீ மேலும் பரவாது என்ற சூழல் காரணமாக, நள்ளிரவில் தீயணைப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தீயணைப்பு நடவடிக்கை இன்று காலை மீண்டும் தொடங்கியது.



