சிலாங்கூரில் ‘கழிவிலிருந்து மின்னாற்றல்’ தொழில்நுட்பத்தை ஆராயுமாறு சுல்தான் வலியுறுத்து

6 செப்டெம்பர் 2026, 3:17 PM
சிலாங்கூரில் ‘கழிவிலிருந்து மின்னாற்றல்’  தொழில்நுட்பத்தை ஆராயுமாறு சுல்தான் வலியுறுத்து
சிலாங்கூரில் ‘கழிவிலிருந்து மின்னாற்றல்’  தொழில்நுட்பத்தை ஆராயுமாறு சுல்தான் வலியுறுத்து
சிலாங்கூரில் ‘கழிவிலிருந்து மின்னாற்றல்’  தொழில்நுட்பத்தை ஆராயுமாறு சுல்தான் வலியுறுத்து

ஷா ஆலாம், செப்டம்பர் 6: சிலாங்கூரில் கழிவு நிர்வகிப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு நவீன நிலையான அணுகுமுறையாக, 'கழிவிலிருந்து ஆற்றல்' (Waste-to-Energy - WTE) எனும் தொழில்நுட்பத்தை ஆராய்வதில் மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள 'அமேகர் பாக்கே' (Amager Bakke அல்லது CopenHill) என்ற கழிவு சார்ந்த வெப்ப- மின் உற்பத்தி நிலையத்தைப் பார்வையிட்ட பிறகு, சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹஜ் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமேகர் பாக்கே நிலையத்தின் கட்டமைப்பு சுல்தானைக் கவர்ந்ததாக சிலாங்கூர் அரசக் குடும்ப அலுவலகத்தின் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையம் கழிவுகளை நிர்வகித்து ஆற்றலை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் மக்கள் பயன்படுத்துவதற்கான பொழுதுபோக்கு இடத்தையும் வழங்குகிறது.

"இது தொடர்பாக, மாநில அரசு கழிவிலிருந்து ஆற்றல் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இன்னும் தீவிரமாக ஆராய வேண்டும் என்றும், பாதுகாப்பு, செலவு, மாசு கட்டுப்பாடு மற்றும் மக்களின் நலன் ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு சிலாங்கூருக்கு ஏற்ற சிறந்த முறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சுல்தான் விரும்புகிறார்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த அதிகாரப்பூர்வமற்ற பயணத்தின் போது, சுல்தானுடன் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மற்றும் யுனைடெட் பிளான்டேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கார்ல் பெக்-நீல்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

அமேகர் பாக்கே நிலையம் ஆண்டுக்கு சுமார் 400,000 டன் கழிவுகளை நிர்வகித்து, கோபன்ஹேகனில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் வெப்பமூட்டும் வசதியை வழங்குகிறது.

இந்த எரிப்பு செயல்முறையிலிருந்து வெளிவரும் மாசு உமிழ்வைக் குறைப்பதற்காக, இந்த நிலையம் 'ஃப்ளூ கேஸ்' (flue gas) சுத்திகரிப்பு அமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் கரியமிலவாயு வெளியேற்றத்தை எதிர்கொள்வதற்காக, கார்பன் பிடிப்பு (carbon capture) தொழில்நுட்ப மேம்பாட்டிலும் இது தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

குப்பை கிடங்குகளில் (landfill) கழிவுகளைக் கொட்டும் முறையை இந்த அணுகுமுறை குறைப்பதால், நிலத்தடி நீர் மாசுபடுதல் (leachate) மற்றும் துர்நாற்றப் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க இது உதவுகிறது என்ற அம்சம் சுல்தானை வெகுவாக ஈர்த்தது.

மேலும், இந்த நிலையத்தின் கூரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் ஆண்டு முழுவதும் பனிச்சறுக்கு சரிவுகள் (ski slopes), நடைப்பயணப் பாதைகள் (hiking trails) மற்றும் பாறை ஏறும் சுவர்கள் (rock climbing walls) போன்ற பொது வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, பொழுதுபோக்கு செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

சிலாங்கூர் ஏற்கனவே , கடந்த மே 12 ஆம் தேதி, மாநிலத்தின் முதல் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய, கழிவிலிருந்து ஆற்றலை உருவாக்கும் நிலையமான 'ஜெராம் 1' (Jeram 1) நிலையம் அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியதன் மூலம் வரலாறு படைத்தது.

கழிவிலிருந்து மின்னாற்றலை உருவாக்கும் 'ஜெராம் 1' (Jeram 1) நிலையம் : படம் -மீடியா சிலாங்கூர்

இந்த நிலையம் நாளொன்றுக்கு 1,500 டன் வரையிலான திடக்கழிவுகளை நிர்வகிக்கும் திறன் கொண்டதுடன், மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது.

இதன் மூலம் பாரம்பரிய குப்பை கிடங்கு முறைகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான மாநில அரசின் நடவடிக்கைகளில் ஒன்றாக இது மாறியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.