ஜகார்த்தா, செப் 6 : அனாக் கிராகாதாவ் (Anak Krakatau) எரிமலை கக்கிய சாம்பலால், இந்தோனேசியாவில் தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையங்களின் எண்ணிக்கை 6-லிருந்து 8-ஆக உயர்ந்துள்ளது.
இதனால், 467 விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. 1 லட்சத்து 50,000 பயணிகள் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் போனது.
இன்று நள்ளிரவு வரை பாதிக்கப்பட்ட அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருக்குமென அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் டூடி புர்வகந்தி தெரிவித்தார்.
நள்ளிரவுக்குப் பின் நிலைமை கண்காணிக்கப்படுமென , ஜகார்த்தா சுகார்ணோ -ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
பந்தேனில் உள்ள சுகார்ணோ -ஹட்டா அனைத்துலக விமான நிலையம்,
ஜகார்த்தாவிலுள்ள ஹலிம் பெர்டானாகுசுமா விமான நிலையம்,
லம்புங்கில் உள்ள ராடின் இந்தேன் II விமான நிலையம்,
மேற்கு ஜாவாவில் உள்ள ஹுசேன் சாஸ்த்ராநெகாரா விமான நிலையம்,
பந்தேனில் உள்ள புடியார்தோ, போண்டோக் காபே விமான நிலையங்கள் ஆகியவைத் தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையங்களாகும்.
பின்னர், தென் சுமத்ராவில் உள்ள தவுஃபிக் கியெமாஸ் மற்றும் அதுங் புங்சு விமான நிலையங்களும் மூடப்பட்டன.
இந்த பயண இடையூறை அடுத்து, விமானங்கள் மாற்று விமான நிலையங்களில் தரையிறங்குவதற்காக, கெர்தாஜாதி,செமாராங், ஜுவாண்டா யோக்யாகார்த்தா, சோலோ விமான நிலையங்கள் 24 மணி நேரம் செயல்படுமென அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 467 விமானப் பயணங்களில் 58 பயணங்கள் அனைத்துலக விமானப் பயணங்களாகும். சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்றுப் பயண ஏற்பாடுகளை செய்து வருவதோடு, தங்குவதற்காக தங்கும் விடுதி வசதியையும் ஏற்படுத்தி வருகிறது.



