பெட்டாலிங் ஜெயா, செப் 6 - வியட்நாம், ஞா திராங்கில் (Nha Trang) நடைபெற்ற உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியப் பிரதிநிதி தானுசியா செட்டி (Taanusiya Chetty) மூன்றாம் இடத்தை வென்றார்.
இறுதிச் சுற்றுக்குத் தேர்வான ஆறு பேரில் ஒருவரான தானுசியா, அர்த்தமுள்ள அழகு எனும் 'பியூட்டி வித் எ பர்பஸ்' (Beauty With A Purpose) விருதையும் வென்றார்.
சமூக நடவடிக்கையில் பங்கேற்பாளரின் ஈடுபாடும் மற்றும் சமூகத்தில் அந்நடவடிக்கை ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையிலும் வழங்கப்படும் உலக அழகிப் போட்டியின் முக்கிய அங்கீகாரங்களில் ஒன்று அந்த விருதாகும்.
கல்வியாளர் பின்னணியைக் கொண்ட 26 வயதான இவர், மலாய், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் தமிழ் மொழிகளை சரளமாகப் பேசக்கூடியவர்.
இப்போட்டியின் போது அவர் 'தாரியான் சிலாட்' (tarian silat) தற்காப்புக் கலை நடனத்தை நிகழ்த்திக் காட்டினார்.
உலக அழகிப் போட்டியில் மலேசியாவின் சிறந்த சாதனையாக 1998-ஆம் ஆண்டில் லினா தியோ (Lina Teoh) மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
ரஹிமா ஓர்சியண்ட் யாயா (Rahimah Orchient Yayah) 1994-இல் முதல் 10 இடங்களுக்குள்ளும், டெபோரா ஹென்றி (Deborah Henry) 2007-இல் முதல் 16 இடங்களுக்குள்ளும் இடம் பிடித்தனர்.



