ஷா ஆலாம், 5 செப்டம்பர்: நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள புகை மூட்டப் பாதிப்பைத் தொடர்ந்து, ஆஸ்துமா பாதிப்புகள் எட்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.
அதோடு கண் வலி பாதிப்புகளும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைமூட்டத்தில் உள்ள நுண்துகள்கள் சுவாசப்பாதையைத் தூண்டி வீக்கத்தை ஏற்படுத்துவதால் இந்த நிலை ஏற்படுகிறது என பொதுச் சுகாதார மருத்துவ நிபுணர் டத்தோ டாக்டர் ஜைனல் அரிஃபின் உமர் கூறினார்.
காற்று மாசு நுரையீரலின் நோய் எதிர்ப்புத் திறனைப் பலவீனப்படுத்துவதால், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் எளிதில் தாக்கி தீவிர சுவாசப்பாதை தொற்று (URTI) ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், புகைமூட்ட துகள்கள் கண்களை நேரடியாகப் பாதிப்பதால் கண் வலி ஏற்படுவதாக பெரித்தா ஹாரியான் செய்தியறிக்கை வழி அவர் தெரிவித்தார்.
மலேசிய சுகாதார அமைச்சு கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், 34-வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME-34) மொத்தம் 1,811 ஆஸ்துமா பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும், இது அதற்கு முந்தைய வாரத்தின் 219 பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய உயர்வு என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல், கண் வலி பாதிப்புகளும் 33-வது தொற்றுநோயியல் வாரத்தின் 146 பாதிப்புகளிலிருந்து 720 ஆக உயர்ந்துள்ளன; ஆனால் தீவிர சுவாசப்பாதை தொற்று (URTI) பாதிப்புகள் 3,674 லிருந்து 1,857 ஆக 50 விழுக்காடு குறைந்துள்ளன.



