ஈப்போ, 5 செப்டம்பர்: இங்குள்ள தாமான் பெங்கலான் ஜெயாவில் கடந்த செவ்வாய்க்கிழமை கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தன்று காலை 10.30 மணியளவில் இரு கார்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், 26 வயதுடைய பாதிக்கப்பட்ட இளைஞரைத் துரத்திச் சென்று தாக்கியுள்ளது.
தப்பிக்க முயன்று கிந்தா ஆற்றில் குதித்த அந்த இளைஞரை, கும்பலில் ஒருவன் பாராங்கத்தியால் தாக்கியதாக , பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஜைனல் அபிதின் தெரிவித்தார்.
இதில் அந்த இளைஞருக்கு முகம், கை, கால் மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், பொதுமக்களின் உதவியுடன் அந்த இளைஞர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பழிவாங்குதலும் அதிருப்தியுமே இச்சம்பவத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட 22 முதல் 41 வயதுடைய 11 உள்ளூர் ஆடவர்கள் போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான பழைய குற்றப் பின்னணியைக் கொண்டவர்கள் ஆவர்.
இவர்கள் அனைவரும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, ஆயுதங்களைப் பயன்படுத்தி கடுமையான காயம் ஏற்படுத்தியதற்கான குற்றவியல் சட்டப் பிரிவு 326-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.



