புத்ராஜெயா, செப் 4 : தடுப்புக் காவல் அனுமதிக்காக நீதிமன்றம் கொண்டு வரப்படும் ' விசாரிக்கப்படும் நபர்கள் ' ( Orang Kena Siasat), இனி ஆரஞ்சு நிறத்திலான சட்டையை அணியத் தேவையில்லை.
அந்த நடைமுறை உடனடியாக நிறுத்தப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.
' விசாரிக்கப்படும் நபர்கள் ', நீதிமன்றம் கொண்டு வரப்படும்போது சாதாரண உடையை அணியலாம்.
அந்நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படும் கால கட்டத்தில் மட்டுமே, தடுப்புக் காவலுக்கான சட்டையை அணிந்திருப்பர் என , மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்ட் ஹாலிம் அமான் தெரிவித்தார்.
இதனிடையே, கைவிலங்கிடும் நடைமுறை, சூழ்நிலையைப் பொறுத்து அமையும். ' விசாரிக்கப்படும் நபர்கள் ' வயதானவர்கள், உடற்குறையுடையவர்கள், சிறுவர்கள், ஆகியவர்களாக இருந்தால் கைவிலங்கிடுவது தவிர்க்கப்படுமென அப்ட் ஹாலிம் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.
எனினும், எப்போதும் போல் முன்னெச்சரிக்கையாக, விசாரிக்கப்படும் நபர்களைக் கையாளும் நடைமுறை நெடுகிலும் பாதுகாப்பு கட்டுப்பாடு அமலில் இருக்குமென அவர் குறிப்பிட்டார்.



