ஷா ஆலம், செப் 4 : சிலாங்கூரில் பணிபுரியும் தாய்மார்களுக்கு உதவும் வகையில் வழங்கப்படும் 1,000 ரிங்கிட் நிதியுதவித் திட்டமான 'மாமாகெர்ஜா 2.0' (MamaKerja 2.0), கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 16,199 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
இந்த விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு 45 நாட்கள் ஆகும் என்று மகளிர் மேம்பாட்டுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.

" தற்சமயம் 16,091 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. போதிய தகுதிகள் இல்லாதது மற்றும் சிலாங்கூர் வாக்காளராக இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால் 108 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இல்லாதது மற்றும் வருமான ஆதாரத்தை நிரூபிக்கத் தவறியது ஆகியவையும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான பிற காரணங்களாகும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
மாமாகெர்ஜா 2.0 திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த ஆகஸ்ட் 17 முதல் 'NINE' செயலி வழியாகத் தொடங்கப்பட்டன. இந்த நிதியுதவி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்.
முதல் கட்டத்தில் 500 ரிங்கிட்டும், விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் எஞ்சிய 500 ரிங்கிட்டும் வழங்கப்படும்.
சிலாங்கூரில் பணிபுரியும் அதிகமான தாய்மார்கள் இந்த 1,000 ரிங்கிட் நிதியுதவியைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, மாநில அரசு மாமாகெர்ஜா 2.0 திட்டத்தின் தகுதி நிபந்தனைகளைத் தளர்த்தியுள்ளது.
முக்கிய மாற்றமாக, முந்தைய மாமாகெர்ஜா 1.0 திட்டத்தில் குறைந்தபட்சம் 3 குழந்தைகள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.
ஆனால் தற்போது, 6 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தையாவது இருந்தால் போதும் என்று மாற்றப்பட்டுள்ளது.
மாமாகெர்ஜா 2.0 திட்டத்திற்குத் தகுதி பெற மலேசியராகவும் சிலாங்கூர் மாநில வாக்காளராகவும் இருக்க வேண்டும்.
பணிபுரியும் பெண்ணாக இருக்க வேண்டும் மற்றும் குடும்ப மாத வருமானம் 8,000 ரிங்கிட் அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
6 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தையாவது இருக்க வேண்டும்.மேலும், விண்ணப்பதாரர்கள் மாமாகெர்ஜா 1.0 (MamaKerja 1.0), அசு பிந்தார் (Asuh Pintar), துனாஸ் (Tunas) மற்றும் பிங்காஸ் (BINGKAS) ஆகிய திட்டங்களின் பயன் பெற்றவராக இருக்கக் கூடாது.
அதே வேளையில், குழந்தைகளைப் பதிவுசெய்யப்பட்ட காப்பகங்கள் (taska/tadika) அல்லது அடிப்படைப் பராமரிப்புப் பயிற்சி பெற்ற காப்பாளர்களிடம் (pengasuh) அனுப்பும் தாய்மார்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மாமாகெர்ஜா திட்டம், 2023 சிலாங்கூர் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, பக்காத்தான் ஹரப்பான் மற்றும் தேசிய முன்னணி கூட்டணி, மக்களுக்கு 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த 'கித்தா சிலாங்கூர்' (Kita Selangor) திட்டங்களின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



