கோலாலம்பூர், செப். 1 - நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் இருந்து இந்தியச் சமூகம் ஒருபோதும் புறக்கணிக்கப்படாது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
மடானி அரசாங்கத்தின் திட்டங்கள் இந்தியச் சமூகத்தைச் சென்றடைவதை உறுதி செய்யவும், அவர்களின் குறைகளைக் கேட்கவும் நடத்தப்பட்ட சந்திப்புகளுக்குப் பிறகு அவர் இந்த உறுதியை வழங்கினார்.
இந்தியச் சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து விரிவுப்படுத்துமென அவர் கூறினார்.
இந்தியச் சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவின் (MITRA) செயல்பாடுகளை மேம்படுத்துதல், தேக்குன் நேஷனல் (TEKUN Nasional) மற்றும் அமானா இக்தியார் மலேசியா (AIM) ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்திய சிறுதொழில் முனைவோருக்கான நிதி உதவிகளை விரிவுபடுத்துதல், இந்திய இளைஞர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) வாய்ப்புகளையும், தொழில்முனைவோர் பயிற்சித் திட்டங்களையும் அதிகரித்தல், வழிகாட்டி (Mentor-Mentee) திட்டங்கள் மூலம் அடுத்த தலைமுறை இந்திய இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற முயற்சிகள் அவற்றில் அடங்கும் என்றார்.
வறுமை ஒழிப்பு, குடியுரிமைப் பிரச்சினை மற்றும் நல வாரிய உதவிகள் போன்ற நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.
ஆகவே, அரசாங்கத்தின் முயற்சிகளும் ஒதுக்கீடுகளும் குறிப்பிட்ட தரப்பினரைச் சரியாக சென்றடைந்து அவர்கள் பயனடைவதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுகளும் அமைப்புகளும் , ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, சேவை முறையை மேம்படுத்துமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
தமது ஃபேஸ்புக் பதிவின் மூலம பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.




